பிரித்தானியாவின் ஸ்டார்மர் அரசாங்கம் பாசிச குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையை வெளியிடும்போது, தொழிற் கட்சியிலுள்ள "இடதுகள்" முற்றிலும் பலவீனமடைந்து அடிபணிந்து கிடக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அதிவலது சீர்திருத்த பிரித்தானிய  கட்சி (Reform UK Party) மற்றும் பாசிசவாதியான டோமி ரொபின்சன் ஆகியோரால் பாராட்டப்பட்ட புலம்பெயர்வு எதிர்ப்பு வேலைத் திட்டத்தை தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டதானது, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் தொழிற்கட்சி “இடதுகளின்” திவால் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

அகதிகளின் நிரந்தர வதிவிட அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற் கட்சி தலைமைக்கு எதிராக ஒரு “கிளர்ச்சி” பற்றி பேச்சு இருந்தாலும், கட்சியின் இரண்டு டசினுக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்வதுபற்றி கவலைப்படவில்லை.

செப்டம்பர் 30, 2025 செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெற்ற வருடாந்திர தொழிற் கட்சி மாநாட்டில் பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது முக்கிய உரையை நிகழ்த்துகிறார். [AP Photo/Jon Super]

கடந்த செவ்வாய்க்கிழமை, மெட்ரோ பத்திரிகை தனது முதல் பக்கத்தில், “தொழிற்கட்சிக்குள் புகலிடக் கலகம் தொடங்குகிறது” என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டது. ஆனால். அது வெளியிடப்பட்ட நேரத்தில், அனைத்து குழப்பங்களும் தணிந்திருந்தன.

கடந்த திங்கட்கிழமை முடிவில், உள்துறை அமைச்சர் ஷபனா மஹ்மூத் முன்வைத்த முன்மொழிவுகளை விமர்சிக்க 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முன்வந்தனர். செவ்வாய்க்கிழமைக்குள், தொழிற் கட்சியைச் சேர்ந்த பிரபு டப்ஸ் உட்பட இன்னும் நான்கு பேர் சேர்ந்து 22 எம்.பி. க்களாக எண்ணிக்கையை அதிகரித்தனர். தொழிற் கட்சிக்கு 405 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் மட்டுமே இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதையும் பேசத்  துணிந்தனர்.

முன்னதாக கார்டியன் பத்திரிகை, “மஹ்மூத்தின் திட்டங்களின் கடுமையான தன்மை, மூத்த தொழிற்கட்சி அமைச்சர்கள் மற்றும் உதவி அமைச்சர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அமைதியின்மையை ஏற்படுத்தியிருந்தது. குறைந்தபட்சம் ஒருவர் ராஜினாமா செய்யும் விளிம்பில் இருந்தார்” என்று குறிப்பிட்டிருந்தது. முன்னணி அமைச்சர் பதவிகளை வகிக்கும் 121 எம்.பி.க்களில் (92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 29 பிரபுக்கள் சபை உறுப்பினர்கள்) ஒரு அமைச்சர் பதவி விலக நினைத்துக்கொண்டிருப்பது, ஸ்டார்மர் கட்சியின் கொடூரத்தை இது பறைசாற்றுகிறது. ஆனால், அமைச்சர் மஹ்மூத் தனது திட்டங்களை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு —இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகளின் உரிமைகளில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்கள் என்று ஊடகங்களிலும் உள்துறை அலுவலகத்திலும் பல நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தன— ஒரு எம்.பி. கூட எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யவில்லை.

பல ஆண்டுகளாக, ஸ்டார்மரின் கட்சியில் நீடிக்க தீவிரமாக முயற்சிக்கும் ஒரு சில டசின் எம்.பி.க்களின் ஒரு பகுதியாக தொழிற்கட்சி இடதுசாரிகள் செயல்பட்டு வந்தனர். முன்னாள் கட்சித் தலைவரும், தொழிற்கட்சி எம்.பி.க்களின் சோசலிஸ்ட் பிரச்சாரக் குழு (SCG) பிரிவின் தலைவருமான ஜெர்மி கோர்பின், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் பாராளுமன்றக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இறுதியாக, ஜூலை 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பு முற்றிலுமாக கட்சியிருந்து வெளியேற்றப்பட்டார். “தொழிற் கட்சி எம்.பி.க்களின் சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவிலிருந்து அவ்வப்போது ட்வீட்களை” இடுகையிடுவதாகக் கூறும் SCG இன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் X பக்கம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குழுவின் பெயரில் எந்த இடுகையும் வெளியிடவில்லை என்று அதன் சுருக்க வரலாறு கூறுகிறது. அதன் மற்றொரு பக்கம் SCG எம்.பி.க்களின் எண்ணிக்கையை 34 என பட்டியலிடுகிறது.

சோசலிச பிரச்சாரக் குழு, இதற்கு மிகவும் மறைமுகமாக இருப்பதால், அமைச்சர் மஹ்மூத்தின் கொள்கை குறித்து ஆரம்ப விமர்சனங்களை முன்வைக்க, அவர்களில் துணிந்த ஒருவர் கூட இல்லை. மாறாக ஒரு புதிய எம்.பி. டோனி வாகன் தான் இருந்தார். வலதுசாரி எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறுவது போல், இது கட்சியில் ஒரு “உள்நாட்டுப் போரை” தொடங்குவதாகவோ அல்லது அதன் அணிகளில் (மெட்ரோ) ஒரு “பிளவு” ஏற்படுவதற்கான முன்னறிவிப்பாகவோ இல்லை.

“அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கருத்து தவறானது” என்று வோகன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடிந்தது. அதற்குப் பிறகு, “எங்களுக்கு குடியேற்றக் கட்டுப்பாடுகள் முற்றிலும் தேவை” என்று கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் “எமது சமூகங்களில் இனவெறி மற்றும் வன்முறையைத் தூண்டுவதுடன், அதே பிளவுபடுத்தும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்” என்றும், “ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கும் ஒரு முறை பிறந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீடுகள், அகதிகள் பெருமளவில் நாடு கடத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்று நினைப்பது தவறு” என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால், வாரங்களில் சட்டமாக மாறவிருக்கும் ஸ்டார்மரின் கொடூரமான எல்லைப் பாதுகாப்பு, புகலிடம் மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வாக்களித்த வாகனுக்கு, பிரச்சனை என்னவென்றால், இவை அனைத்தும் ஏற்கனவே அவர் ஆதரிக்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய நாடுகடத்தல் கொள்கைக்கு ஒரு தடையாக இருந்தது என்பதாகும். “இது நமது புகலிட அமைப்பைச் செயல்பட வைப்பதில் இருந்து பெரும் அளவிலான வளங்களை அகற்றும். குறிப்பாக, ஆரம்ப முடிவில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதைக் குறைப்பதன் மூலம், புகலிடம் தங்குமிடங்களைத் தீர்ப்பது, இங்கிலாந்து-பிரான்ஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவது, கோரிக்கைகள் தோல்வியுற்றவர்களை அகற்றுவது போன்றவை”, என்று வோகன் குறிப்பிட்டார்.

பல தொழிற் கட்சியை சேர்ந்த இடதுகளான பெல் ரிபீரோ-ஆடி, கிளைவ் லூயிஸ், மற்றும் நாடியா விட்டோம் உட்பட, டோனி வோகனின் கருத்துக்களை மறுபதிவு செய்வதற்கு மட்டுமே தங்கள் எதிர்ப்பை எடுத்துக்கொண்டனர். பாராளுமன்றத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில், அமைச்சர் மஹ்மூத்தின் திட்டங்கள் “அகதிகள் குடும்பமாக மீண்டும் இணைவதற்கான அணுகலை” மட்டுப்படுத்துவதுடன், அறிவிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை கண்ணியம் மற்றும் இரக்கத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்று கூறுவதோடு நாடியா விட்டோம் தனது விமர்சனத்தை மட்டுப்படுத்திக் கொண்டார்.

கோர்பினின் நிழல் அமைச்சரவையில் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ஜோன் மெக்டோனல், “ஊடகங்கள் வழக்கமான சந்தேக நபர் என்று அழைப்பது போல் வாகன் நிச்சயமாக இல்லை. அவர் இங்கு [தொழிற் கட்சியின் பாராளுமன்ற] பல உறுப்பினர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று நான் சந்தேகிக்கிறேன்” என்று பதிவிட்டார்.

பாராளுமன்றத்தில் மெக்டோனல், “நாம் புதிய சட்டங்களையும் புதிய நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தும்போது, ​​அதன் தாக்கங்களையும் அவை நம்மை எங்கு வழிநடத்தும் என்பதையும் கணக்கிடுவது முக்கியம்” என்று கூறினார். “எனது உண்மையான மதிப்பிற்குரிய தோழி, இன்று அவர் சொல்வதன் தாக்கங்கள் குறித்து குழந்தைகள் ஆணையர், கல்வி உளவியலாளர்கள் அல்லது பிறரிடம் ஆலோசனை கேட்டாரா என்று நான் கேட்கலாமா? இந்தக் கொள்கை மாற்றத்தின் விளைவாக எந்தக் குழந்தையும் தடுப்புக்காவலில் வைக்கப்படாது என்று அவர் எனக்கு உறுதியளிக்க முடியுமா?” என்று அவர் மஹ்மூத்திடம் கேட்டார்.

மெக்டோனல் பின்னர் தனது சொந்த எக்ஸ் தளத்தில், “மஹ்மூத் சொல்வதைக் கேட்பது பல ஆண்டுகளாக நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் ஏற்படும் தாக்கத்தில் எனது துயரத்தை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. ஏற்கனவே தங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ச்சியடைந்த குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதை நான் ஆதரிக்க மாட்டேன்” என்ற கருத்தை வெளியிட்டார்.

மேலும் சமூக செலவினக் குறைப்புகளுக்கு வாக்களிக்க மறுத்ததற்காக ஸ்டார்மரால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதினான்கு மாதங்களாகப் பதவியில் இல்லாத மெக்டோனல், செப்டம்பரில் தனது இடத்தை மீண்டும் பெற்றார். அமைச்சர் மஹ்மூத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் வாக்களிப்பார், ஆனால் பாசிஸ்டுகளை ஈர்க்கக்கூடிய கொள்கைகளுக்குப் பொறுப்பான ஒரு கட்சியை விட்டுச் செல்வது என்பது கேள்விக்குறியே. 74 வயதான அவர், ஸ்டார்மர் அரசாங்கத்துடன் “அதிகபட்ச ஒற்றுமையுடன்” தொழிற்கட்சி எம்.பி.யாக தனது வசதியான வாழ்க்கையை முடிக்க விரும்புகிறார். அதே நேரத்தில் அவ்வப்போது தனது நாற்காலியில் இருந்து அவர் சறுக்குகிறார்.

செப்டம்பர் 23, 2019 அன்று இங்கிலாந்தின் பிரைட்டனில் உள்ள பிரைட்டன் மையத்தில் நடந்த தொழிற் கட்சி மாநாட்டின் போது மேடையில் நிழல் சான்சலர் ஜோன் மெக்டொனல், இடது, பிரிட்டனின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் [AP Photo/Kirsty Wigglesworth]

சமீபத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட “இடது“ எம்.பி.யான அப்சனா பேகம், “தங்கள் சொந்த நாடு பாதுகாப்பானது என்ற சாக்குப்போக்கில், இங்கு மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களை நாடு கடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பாராளுமன்றத்தில் கூறினார். பின்னர் அவர் தனது கொள்கை குறித்து அமைச்சர் மஹ்மூத்திடம் தொடர்ச்சியான மேலோட்டமான கேள்விகளை எழுப்பினார்: குறிப்பாக அவர், “பாதுகாப்பான நாடு எது என்பதை அரசாங்கம் எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதை உள்துறை அமைச்சர் எங்களுக்கு விளக்க முடியுமா? அவர் தனது அளவுகோல்களை வெளியிடுவாரா? அவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசு பற்றி குறிப்பிட்டார்; அது ஒரு பாதுகாப்பான நாடு என்று அவர் உண்மையில் கூறுகிறாரா? இந்த சபையின் உறுப்பினர்களும் பிரிட்டிஷ் பொதுமக்களும் அவற்றை கவனமாக ஆராயும் வகையில், தற்போதுள்ள நாடு திரும்பும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளியிடுவாரா?” என்ற கேள்விகளை எழுப்பினார்.

சோசலிச பிரச்சாரக் குழுவின் செயலாளரான ரிச்சர்ட் பர்கன், “இது வெறுமனே சீர்திருத்தத்துடன் அந்நியப்படுத்துவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சி இல்லையா?” என்று கேட்டார். அமைச்சர் மஹ்மூத்தின் ஆய்வறிக்கை வெறுமனே “சமீபத்திய மாதங்களில் செய்யப்பட்ட பிற பயங்கரமான கொள்கைப் பிழைகளில்” சமீபத்தியது என்று அவர் விவரித்தார். இது ஒரு தீவிர வலதுசாரி கட்சியின் கொள்கை என்று கூற பர்கன் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, “இந்த தோல்வியுற்ற தொழிற்கட்சித் தலைமை பரேஜால் நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பில் போராடத் தேர்வுசெய்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இது நமது வரலாற்றில் முதல் தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது” என்று புகார் கூறினார்.

ரிச்சர்ட் பர்கன் லண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார்

தொழிற்கட்சியின் இடதுகள் எந்தப் போராட்டத்தையும் நடத்த மறுத்ததால், கட்சியிலுள்ள வலதுசாரிகளிடமிருந்து சில எதிர்ப்புக்கள் வந்தன. இதில் அமைச்சர் மஹ்மூத்தின் கொள்கை மிகவும் விலை உயர்ந்ததாக முடிவடையும் என்ற காரணமும் அடங்கும். 2016 ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் தலைவராக இருந்த கோர்பினை பதவியில் இருந்து நீக்குவதுக்கு, வலதுசாரிகளின் சதித் திட்டத்தை ஆதரித்த ஸ்டெல்லா க்ரீஸி, அமைச்சர் மஹ்மூத்தின் நிகழ்ச்சி நிரல் “செயல்திறன் ரீதியாக கொடூரமானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தவறாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும் அவர், “இந்தக் கொள்கை அகதிகளுக்கு உதவுவதற்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. உங்களது அந்தஸ்தை உறுதிப்படுத்த முடியாவிட்டால், நீங்கள் எப்போதும் வேலை, வங்கிக் கணக்கு அல்லது வீட்டுக் கடன் பெற போராடுவீர்கள், இதனால் நீங்கள் அரச அல்லது தொண்டு நிறுவனங்களை சார்ந்திருப்பீர்கள்” என்று கூறினர்.

தொழிற் கட்சியின் கொள்கையை துல்லியமாக விவரித்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் சாரா சுல்தானா ஆவார். அவர் பாராளுமன்றத்தில் “இந்த நடவடிக்கைகள் பாசிச நாடகத்திலிருந்து நேரடியாக வந்தவை” என்று கூறினார். ஜூலை மாதம் சுல்தானா தொழிற்கட்சியை விட்டு வெளியேறி, கோர்பினுடன் இணைந்து ஒரு புதிய இடது கட்சியை வழிநடத்துவதாக அறிவித்தார்.

ஆனால், சுல்தானா என்ன வாய்வீச்சுக்களைக் கொண்டு வந்தாலும், அவரும் கோர்பினும் அரசியல்ரீதியில் அழுகிப்போன மற்றும் முதுகெலும்பற்ற தொழிற்கட்சியிலுள்ள “இடது” சகாக்களை, ஸ்டார்மருக்கு எதிரான போராட்டமிக்க ஒரு சோசலிச மாற்றாகக் காட்ட முயல்கிறார்கள்.

கடந்த செவ்வாயன்று, கோர்பின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சேனல் 4 நியூஸ் உடன் நடத்திய ஒரு நேர்காணலின் வீடியோவை எக்ஸ் தளத்தில் மீண்டும் வெளியிட்டார். தொழிற் கட்சியின் தலைவராக பதவி வகித்த ஒருவர் என்ற முறையில், ஸ்டார்மர் மீது அவருக்கு ஏதேனும் அனுதாபம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது கோர்பின், “தொழிற் கட்சியின் தலைவராக இருப்பது உண்மையில் மிக, மிகவும் கடினமானது,” என்று பதிலளித்தார்.

பின்னர் கோர்பின், கட்சியில் இருந்த தனது “பழைய நண்பர்களான” மெக்டோனல் போன்றவர்களை நினைவு கூர்ந்ததோடு, அவர்களை “மிகவும் சுறுசுறுப்பானவர்கள் மற்றும் மிகவும் நல்லவர்கள்” என்று விவரித்தார்.

Loading