முன்னோக்கு

மேற்குக் கரையில் விசாரணையற்ற உடனடி மரணதண்டனை: ட்ரம்பின் “சமாதான” ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த வார தொடக்கத்தில் ஜெனினில் நடந்த சோதனையின் போது இஸ்ரேலிய படையினர் இரண்டு பாலஸ்தீனியர்களைக் கொன்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, பாலஸ்தீன தேசிய தொலைக்காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட். [Photo: Palestine National TV]

கடந்த வியாழக்கிழமை, மேற்குக் கரையில் இரண்டு நிராயுதபாணிகளான பாலஸ்தீனியர்கள் சரணடைந்த பிறகு, இஸ்ரேலியப் படைகள் அவர்களுக்கு விசாரணையற்ற உடனடி மரணதண்டனையை நிறைவேற்றின. இது, வீடியோவில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில், பாதிக்கப்பட்ட யூசெப் அசாசா (39), அல்-முன்டாசர் பெல்லா அப்துல்லா (26) ஆகியோர் நிராயுதபாணிகள் என்பதை நிரூபிக்க தங்கள் சட்டைகளை உயர்த்தி தரையில் படுத்து சரணடைவதைக் காணலாம். இஸ்ரேலியப் படைகள் அவர்களை ஒரு கட்டிடத்திற்குள் நுழைய உத்தரவிட்டு, தரையில் படுக்க கட்டாயப்படுத்திய பின்னர் தானியங்கி துப்பாக்கி ரவைகளினால் அவர்களை பலமுறை சுட்டுக் கொன்றுள்ளனர்.

காஸாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலிய இராணுவப் படைகளும், குடியேறிகளும் மேற்குக் கரையில் 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துள்ளனர். மேலும், இந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்களுக்கு முழுமையான சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லோரன்ஸ், இந்தக் “கொடூரமான கொலையானது, மற்றொரு விசாரணையற்ற உடனடியாக விதிக்கப்பட்ட மரணதண்டனை” என்று கூறினார்.

மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமுக்கு எதிராக நடந்து வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. “அவர்கள் இஸ்ரேலியப் படைகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பதை அனைவரும் பார்த்தார்கள்,” என்று இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுவான பி’ செலெமைச் சேர்ந்த ஷாய் பார்ன்ஸ் கூறினார். “ஆனால் படையினர், அவர்களை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர்” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டத்தின் கீழ், ஒரு போர்க் குற்றமான விசாரணையற்ற உடனடியாக விதிக்கப்பட்ட மரணதண்டனையை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் வெளிப்படையாக ஆதரித்து வருகிறார். இவர், “[இஸ்ரேலிய] ஆயுததாரிகள் எதிர்பார்த்தபடி சரியாக செயல்பட்டனர் - பயங்கரவாதிகள் இறக்க வேண்டும்” என்று அறிவித்தார்.

அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலியப் படைகள் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி விசாரணையற்ற உடனடி மரணதண்டனையை நிறைவேற்றுவதைக் காட்டும் காட்சிகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆனால், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களும், நேரடி உடல் ஆதாரங்களும் டசின் கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான கொலைகள் இதுபோன்று இடம்பெற்றுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஏப்ரல் 2024 இல், தெற்கு காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள தொடர் பாரிய புதைகுழிகளில் கிட்டத்தட்ட 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களில் பலர் கைவிலங்கிடப்பட்டிருந்ததோடு, மிகவும் அருகில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் தடயங்களைக் கொண்டிருந்தனர்.

இந்த மரணதண்டனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஸாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய ரவைகள் மற்றும் குண்டுகளால் கொல்லப்பட்ட 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பசி, நோய் மற்றும் வறுமையால் இறந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை.

இஸ்ரேலிய படைகள் தொலைக்காட்சி கேமராக்களை பயன்படுத்தி, நிராயுதபாணிகளான பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பது மட்டுமல்லாமல், இஸ்ரேலிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் இந்த நடவடிக்கைகளைப் பாதுகாக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கையெழுத்திட்ட “சமாதான” ஒப்பந்தம் பாலஸ்தீனம் முழுவதும் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் ஒரு செயலைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது. உண்மையில் இஸ்ரேல், காஸா மற்றும் மேற்குக் கரையை இணைக்கும் திட்டத்தை இந்த ஒப்பந்தம் முடுக்கிவிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு, நியூ யோர்க் நகரின் புதிய மேயரும், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் உறுப்பினருமான சோஹ்ரான் மம்தானி, “3,000 ஆண்டுகளில் முதல் முறையாக, மத்திய கிழக்கில் அமைதி நிலவுகிறது” என்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தபோது, ​​அவர் பின்னால் சிரித்தபடி நின்றார். ட்ரம்பின் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், மம்தானி “சமாதானத்தை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

காஸா இனப்படுகொலையின் முன்னணி சிற்பியும், இனச்சுத்திகரிப்பின் பகிரங்க ஆதரவாளருமான ட்ரம்பின் கூற்று ஒரு அபத்தமான மோசடியாகும். ஆனால், அமெரிக்க ஊடகங்கள் ட்ரம்ப் பாலஸ்தீனத்தில் “அமைதியைக்” கொண்டு வந்துள்ளதாக கூறிய பொய்யை எதிரொலித்துள்ளன. மேலும் காஸா, மேற்குக் கரை, லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் பாரிய படுகொலைகள் குறித்து செய்தி வெளியிடுவதை பெரும்பாலும் அவை நிறுத்திவிட்டன. உதாரணமாக, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை, அதன் வெள்ளிக்கிழமை இதழின் முதல் பக்கத்தில், மேற்குக் கரையில் இஸ்ரேலின் மரணதண்டனை பற்றிய செய்தியை வெளியிடவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், ட்ரம்பின் “சமாதான” உடன்படிக்கைக்கு ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. “நீடித்த அமைதி மற்றும் செழிப்புக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ட்ரம்ப்பின் பிரகடனத்தை வரவேற்று, அமெரிக்காவின் ஆக்கபூர்வமான பங்கைப்” பாராட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, நவம்பர் 17 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களித்தது.

இந்த வெட்கக்கேடான தீர்மானம் ஏகாதிபத்திய சக்திகளான பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றின் வாக்குகளுடன் மட்டுமல்ல, மாறாக அல்ஜீரியா மற்றும் பாக்கிஸ்தானின் முதலாளித்துவ ஆட்சிகளின் வாக்குகளுடனும் மற்றும் பாலஸ்தீனிய அதிகார சபையின் ஒப்புதலுடனும் நிறைவேற்றப்பட்டது. “வேண்டாம்” என்ற எதிர்மறை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானத்தைத் தடுத்திருக்கக்கூடிய சீனாவும் ரஷ்யாவும் இதற்கு வாக்களிக்கவில்லை.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையரின் நியூ யோர்க் அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் கிரெய்க் மொகிபர் அறிவித்ததைப் போல, “அமெரிக்க-இஸ்ரேல் காலனித்துவ சீற்றத்திற்கு எதிராக வாக்களிக்க கவுன்சிலின் ஒரு உறுப்பினருக்கும் தைரியம், கொள்கை அல்லது சர்வதேச சட்டத்தின் மீதான மரியாதை இல்லை.”

ட்ரம்ப்பின் திட்டம், பாலஸ்தீனத்தின் மீதான நிரந்தர நவ-காலனித்துவ மேலாதிக்கத்திற்கான கட்டமைப்பை உருவாக்குகிறது. சுயநிர்ணய உரிமையை மீறி, ட்ரம்ப் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் காஸா அரசாங்கத்தை “அமைதி வாரியத்திற்கு” மாற்றுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், காஸா பகுதியில் பாதிக்கும் மேலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. காஸாவை இணைக்கும் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க அது நகர்ந்து வருகிறது.

அக்டோபர் 10 அன்று “போர் நிறுத்தம்” அறிவிக்கப்பட்டதில் இருந்து, இஸ்ரேல் 500 க்கும் மேற்பட்ட முறை அதன் விதிமுறைகளை மீறி, 350 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது மற்றும் சுமார் 900 பேரை காயப்படுத்தியுள்ளது. லெபனான் முழுவதும் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களை அது நடத்தி வருவதோடு, இந்த வாரம் சிரியாவில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இந்த “சமாதான” ஒப்பந்தம், பாலஸ்தீனம் முழுவதையும் “அகன்ற இஸ்ரேலுடன்” இணைக்கும் ஒரு திட்டமிட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்குக் கரையை நோக்கி தனது கவனத்தை திருப்புவதுக்கு இஸ்ரேலுக்கு உதவியுள்ளது. மேலும், லெபனான் மற்றும் சிரியா மீதான தாக்குதல்கள் ஈரானுக்கு எதிரான போருக்கான தயாரிப்பு ஆகும்.

கடந்த செப்டம்பரில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்த நெதன்யாகு, பாலஸ்தீன பிரதேசத்தை திறம்பட பாதியாகக் குறைத்தார். நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் வார்த்தைகளில், தீர்வுத் திட்டமானது “பாலஸ்தீன அரசு என்ற கருத்தை புதைப்பதை” நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த அக்டோபரில், “இஸ்ரேலிய அரசின் சட்டங்கள், நீதித்துறை அமைப்பு, நிர்வாகம் மற்றும் இறையாண்மை ஆகியவை, யூதேயா மற்றும் சமாரியாவில் உள்ள அனைத்து குடியேற்றப் பகுதிகளுக்கும் பொருந்தும்” என்று அறிவிக்கும் ஒரு மசோதாவை முன்வைக்க இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 25-24 என்ற வாக்குகளில் வாக்களித்தனர்.

இந்த நடவடிக்கைகள், மேற்குக் கரையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான குடியேறிகளின் வன்முறை அலையுடன் சேர்ந்துள்ளன. குடியேறிகளின் தாக்குதல்களில் இதுவரை 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய அரசாங்கத்தால் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காஸா “போர் நிறுத்தம்” என்றழைக்கப்படுவதை அறிவித்ததற்குப் பிந்தைய நிகழ்வுகள், பெருநிறுவன ஊடகங்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி, ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அரபு உலகின் முதலாளித்துவ ஆட்சிகள் உட்பட, ட்ரம்பின் “சமாதானத் திட்டத்தை” ஊக்குவித்தவர்களை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவில், இந்த நவ-காலனித்துவ திட்டம் பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியால் தொடங்கப்பட்டது. இப்போது, இது ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கீழ் “நிறைவடைந்து வருகிறது”. இந்த இருகட்சி ஒற்றுமை, கடந்த வாரம் மம்தானியால் நடத்தப்பட்ட வினோதமான காட்சியில் பொதிந்திருந்தது. இனப்படுகொலைக்கான மக்களின் எதிர்ப்பு, மம்தானியின் தேர்தல் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும். இப்போது அவர் தனது தலைமை சிற்பியுடன் ஒரு “கூட்டாண்மைக்கு” உறுதியளிக்கிறார்.

பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை, மத்திய கிழக்கில் இருந்து உக்ரேன் மற்றும் ஆசிய-பசிபிக் வரை நீண்டுள்ள ஒரு பரந்த ஏகாதிபத்திய போரின் ஒரு பாகமாகும். அதை நிறுத்துவதற்கு போர் எந்திரத்தை நிறுத்தும் திறன் கொண்ட ஒரே சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும்.

மத்திய கிழக்கில், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான ஒரு போராட்டத்தை நடத்துவதும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களுடன் நடவடிக்கையில் மிக நெருக்கமான ஐக்கியத்தை உருவாக்குவதும் இதன் அர்த்தமாகும். இந்த அடிப்படையில், இப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளின் முன்னோக்கின் அடிப்படையில், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக போராட வேண்டும். இந்த இலக்கில், உலகெங்கிலும் உள்ள சமூகத்தை சோசலிச மறுஒழுங்கு செய்வதற்கு, ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைப்பது அவசியமாகும்.

Loading