அரச மருத்துவ அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்! இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க சுகாதார ஊழியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனவரி 24 அன்று, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் தனது போராட்ட நடவடிக்கையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவர்கள் வேலைக்கு வந்தாலும், நோயாளிகளுக்கு வெளியில் இருந்து மருந்துகளை வாங்கவும் ஆய்வக சேவைகளைப் பெறவும் பரிந்துரைக்காமை, அரசியல்வாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிப்புற சிகிச்சைகளில் பங்கேற்காமை, துணை ஊழியர்களை வழங்காத பிரிவுகளில் பணிபுரியாமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

14 பெப்ரவரி 2024 அன்று, கொழும்பு தேசிய மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் சுகாதார அமைச்சிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது [Photo: Facebook/Unions Lanka] [Photo: Facebook/Unions Lanka]

சிறுவர், மகப்பேறு, புற்றுநோய் மற்றும் இராணுவ மருத்துவமனைகள், ஏனைய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் தேசிய மனநல சுகாதார விஞ்ஞான நிறுவனம் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் சுமார் 20,000 அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் தங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை நிறைவேற்ற எட்டப்பட்ட உடன்பாடுகளை செயல்படுத்தத் தவறியதற்கு எதிராகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த போராட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து வகை மருத்துவர்களையும் உள்ளடக்கிய 'இலங்கை மருத்துவ சேவை' எனப்படும் சிறப்பு சேவை வகையை நிறுவுதல்; தொந்தரவு, வருகை மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை புதுப்பித்தல்; அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்த சுற்றறிக்கையின் படி, மருத்துவ அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவை நிலையான கொடுப்பனவாக மாற்றுதல், ஆய்வு நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவின் சிக்கல்களைத் தீர்த்தல் ஆகியவை தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளாகும்.

சுகாதாரத் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது மருத்துவர்களின் போராட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கின்றபோதிலும், மருத்துவ சேவையை ஒரு தனி சேவைப் பிரிவாகக் கருதி, அதை ஒரு பிரத்தியேக சேவையாக மாற்ற வேண்டும் என்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர்களின் கோரிக்கையை அது ஆதரிக்கவில்லை. இது மருத்துவர்களை மற்ற ஊழியர்களிடமிருந்து பிரிக்கும் ஒரு குழுவாத கோரிக்கையாகும்.

இலவச சுகாதார சேவையில் மேற்கொள்ளபட்ட வெட்டுக்களால் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடி காரணமாக அனைத்து சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் எதிர்ப்பையே மருத்துவர்களின் போராட்டங்கள் பிரதிபலிக்கின்றன. ஏனைய சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் தலைவர்களைப் போலவே, அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அதிகாரத்துவமும் இந்த போராட்டங்களை வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாக மட்டுப்படுத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர்களும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியுடன் தங்கள் உறுப்பினர்களை கட்டிவைக்கும் நடவடிக்கைகளை எமது நடவடிக்கை குழு கடுமையாக எதிர்க்கிறது. சுகாதார ஊழியர்களின் உரிமைகளுக்கான போராட்டமானது இலவச சுகாதார சேவைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட்டு, அனைத்து சுகாதார ஊழியர்களும் அணிதிரட்டப்பட வேண்டியது அவசியம் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, 'நோயாளிகளை பிணைக் கைதிகளாக வைத்திருக்க வேண்டாம்' என வேலைநிறுத்தம் செய்பவர்களை எச்சரித்தார். மருத்துவர்களுக்கு 'வசதிகளை' வழங்க அரசாங்கம் தயாராக உள்ள போதிலும், ஒரு 'தேசிய நெருக்கடி' எழுந்துள்ளதால், அதைத் தீர்க்க அரசாங்கம் வளங்களை ஒதுக்க வேண்டியுள்ளது என அவரும் ஏனைய சுகாதார நிர்வாகிகளும் கூறினர். இதன் பொருள், டிட்வா சூறாவளியால் மேலும் மோசமாகி, தொடர்ந்து ஆழமடைந்து வரும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு பொதுமக்கள் விலைகொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் போலவே தற்போதைய ஜனாதிபதி திசாநாயகவின் அரசாங்கமும், முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் மும்முரமாக உள்ளது. 2022ல் பொருளாதார சரிவின் போது நிறுத்தி வைக்கப்பட்ட வெளிநாட்டுக் கடனை அடைக்கவும், முதலீட்டாளர்களின் இலாபத்தை அதிகரிக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது. இதற்காக, திறைசேரியில் பணத்தை சேகரிக்க வரிகளை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதோடு மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியை அழிக்க ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது.

நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ முறைமையிலும், அதன் நிர்வாகமான முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழும், எந்தவொரு தொழிலாளர் பிரிவுக்கும், தொழிலறிஞர் குழுக்களுக்கும் அல்லது ஏழை மக்களுக்கும் தங்கள் உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.

ஜனவரி 22 அன்று வெளியிடப்பட்ட மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கையில், அரசாங்கத்தின் 'தற்போதைய நடத்தையில் இலவச சுகாதார சேவையின் எதிர்காலம் குறித்து கடுமையான நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது' என்று கூறப்பட்டது. மேலும், 'மருத்துவமனை அமைப்பில் மனிதவள நெருக்கடி மற்றும் மருந்து நெருக்கடி உட்பட பிரச்சினைகளைத் தீர்க்க, ஒரு காலக்கெடுவிற்குள் ஒரு மூலோபாயத்தை செயல்படுத்த வேண்டிய தேசியத் தேவையைப் புறக்கணித்து, இலவச சுகாதார சேவையை அழிக்கும் பாதையில் அரசாங்கம் தொடர்ந்து பயணித்தால், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, அதைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இடைவிடாது அயராது உழைக்கும்' என்றும் அது கூறியது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அதிகாரத்துவத்தின் இந்த அறிக்கை, பூச்சாண்டி காட்டும் செயலாகும். அரசாங்கத்தின் திட்டத்தின் காரணமாக இலவச சுகாதார சேவையானது “இப்போதே” நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 'நாளை' அல்ல. அரசாங்கம் 'இலவச சுகாதார சேவையை அழிக்க' வெட்டுக்களை துரிதப்படுத்தி வருகிறது.

சுகாதார சேவையின் நெருக்கடியைத் தீர்க்க, 'காலக்கெடுவிற்குள் ஒரு மூலோபாயத்தை செயல்படுத்த' அரசாங்கத்திடம் அல்லது எந்தவொரு முதலாளித்துவக் குழுவிடமும் மன்றாடுவது பயனற்றதாகும். உண்மை என்னவென்றால், இலவச சுகாதார சேவைகளை திட்டமிட்டு வெட்டிச் சரித்து, முதலாளித்துவத்தின் நெருக்கடியை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டமே அனைத்து சுகாதார ஊழியர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும். தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆட்சியின் கீழும் இது தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மருத்துவமனைகளில் உயர் தொழில்நுட்ப சேவைகள் (எம்.ஆர்.ஐ, ஸ்கேன் போன்றவை) மற்றும் இரத்த செறிவூட்டும் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக அரச-தனியார் கூட்டு சேவைகளைப் பெறுவதற்கான சுகாதார அமைச்சரின் முன்மொழிவை அமைச்சரவை ஜனவரி 6 அன்று அங்கீகரித்தது. இதற்கு சுகாதார அமைச்சும் நிதி வழங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது ஒரு கண்கட்டி வித்தையாகும். ஏற்கனவே, மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அதை வெளியல் பெற, அரசாங்க உத்தரவுகளின்படி மருத்துவர்கள் சீட்டுகளை வழங்கி வருகின்றனர்.

2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான சுகாதார சேவைகளுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 1.35, 1.62 மற்றும் 1.6 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 5 சதவீதமாவது பாதீட்டில் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரையிலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது.

இதன் விளைவாக, தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் அனைத்து பிரிவினரும், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், சுகாதார சிகிச்சை சேவைகள் மற்றும் மருந்து நிறுவனங்களை அவர்களால் அணுக முடியவில்லை. அவர்கள் சொந்தமாக பணத்தை செலவிட்டால், அவர்களால் ஏனைய தேவைகளுக்கு செலவிட முடியாது. அல்லது கடன் வாங்கி செலவிட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நோயாளிகள் சரியான சிகிச்சை இல்லாமல் மரணிக்கும் செய்திகள் வருகின்றன. சுகாதாரப் பராமரிப்பை நசுக்கும் அரசாங்கங்கள், ஊடகங்களின் உதவியுடன், இந்த ஏழை மக்களை வேலைநிறுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் இழிவான செயலிலும் ஈடுபட்டுள்ளன.

தொழில்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைத் தாக்கி, இலவசக் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பை அழிப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களே இந்த உலகலாவிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரப் பராமரிப்பு மீதான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தாக்குதல், இதன் ஒரு பகுதியே ஆகும்.

இந்த உலகளாவிய முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்ட அலை வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களும் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் ஆகும். இலங்கையில் மருத்துவர்களின் வேலைநிறுத்தம், இந்த போராட்ட அலையின் ஒரு பகுதியாகும்.

அரசாங்கம், இலவச சுகாதார சேவையை அழிக்கும் பாதையில் சென்றால், 'ஒருங்கிணைந்த போராட்டம்' நடத்துவோம் என்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர்களின் பேச்சுக்கு மாறாக, ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே, அவர்களும் ஒரு பிரிவு தொழிலாளர்களை மற்றொரு பிரிவு தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தி அவர்களை பலவீனப்படுத்தி அரசாங்கங்களின் கைகளை பலப்படுத்துவதையே செய்தனர், என்பதை நாங்கள் அறிவோம்.

இலவச சுகாதார சேவைக்கான வெட்டுக்களை நிறுத்துவதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் முழு தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை பலத்தையும் அரசியல் பலத்தையும் அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, சுகாதார ஊழியர்கள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் கடந்த காலத்தில் கடினமான போராட்டங்களில் வென்ற உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இது சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்துக்கும், அதை செயல்படுத்தும் அரசாங்கத்துக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான போராட்டம் ஆகும்.

இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சங்க அதிகாரிகளைப் போலவே, சுகாதார தொழிற்சங்கத் தலைவர்களும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கின்றனர். சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வரும்போது, தாம்​​ அவ்வப்போது அவர்களை சந்திப்பதாகவும், இந்த அதிகாரிகள் 'பிசாசுகள் அல்ல' என்றும் அரச மருத்துவ அதிகரிகள் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவமானது முதலாளித்துவ நலன்களுக்காக அதன் உறுப்பினர்களின் உரிமைகளை தியாகம் செய்யும் சூழ்நிலையில், நமது உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்திற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்தும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, வைத்தியசாலைகள், சுகாதார நிறுவனங்கள் உட்பட அனைத்து வேலைத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். சுகாதார ஊழியர்கள் மத்தியில் இத்தகைய குழுக்களை உருவாக்குவதில் எங்கள்  நடவடிக்கைக் குழு முன்முயற்சி எடுத்துள்ளது.

நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:

இலவச சுகாதார சேவையை பாதுகாத்திடு!

வெளிநாட்டுக் கடனை அடைப்பதை நிராகரி! இந்த மிகப்பெரிய நிதி வளங்களை சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்!

சீரழிந்து வரும் சுகாதார சேவையை மறுசீரமைக்கவும் நவீனமயமாக்கவும் பில்லியன் கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடுகளை வழங்கு! அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பு!

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஒரு கண்ணியமான சம்பளம் வேண்டும்!

முதலாளித்துவ அமைப்பிற்குள் இந்தக் கோரிக்கைகளில் எதையும் வெல்ல முடியாது. நடவடிக்கைக் குழுவினராகிய நாம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கும், முதலாளித்துவ முறைமைக்கும் எதிராக, சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் (சோ.ச.க.) போராட்டத்தை ஆதரிக்கின்றோம்.

இந்தப் போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும். இதற்காக, இலங்கை நடவடிக்கைக் குழுக்கள், சர்வதேச தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய மையத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.

நடவடிக்கைக் குழுவுடனான கலந்துரையாடலிலும், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அனைத்து சுகாதார நிறுவனங்களிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதிலும் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.

Loading