மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மினியாபோலிஸ் நகரத்திலுள்ள படையினர் விவகார மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் செவிலியராகப் பணியாற்றி வந்த, 37 வயதான அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி, கடந்த சனிக்கிழமை காலை மினியாபோலிஸ் தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு முந்தைய நாள் நடந்த பிரம்மாண்டமான போராட்டங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் கொடூரமான பதிலடியாக இந்தக் கொலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, மினசோட்டா முழுவதும் 1,00,000-க்கும் அதிகமான மக்கள், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறையின் (ICE) ஆக்கிரமிப்பையும், மாநிலத்தை சூழ்ந்துள்ள பொலீஸ்-அரசு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் பிரெட்டியை ஒரு “உள்நாட்டு பயங்கரவாதி” என்று வர்ணிப்பது, ட்ரம்ப் மற்றும் அவரது விசுவாசிகள் தங்கள் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக எந்த ஆழத்திற்கும் இறங்கவும் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
ஒரு செவிலியரான அலெக்ஸ், அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆவர். அவரது குடும்பத்தினர் அவரை “தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் தான் கவனித்துக்கொண்ட அமெரிக்கப் படையினர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு கனிவான ஆத்மாவாக” இருந்தார் என்று விவரித்தனர். அவரது தந்தை எழுதினார்: “நான் ‘ஹீரோ’ என்ற வார்த்தையை லேசாகப் பயன்படுத்துபவன் அல்ல. இருப்பினும், அவரது கடைசி எண்ணமும் செயலும் ஒரு பெண்ணைப் பாதுகாப்பதாகவே இருந்தது.”
அந்தத் துணிச்சலான செயல் அவரது உயிரைப் பறித்தது. ICE மற்றும் CBP அதிகாரிகள் ஒரு போராட்டக்காரர் மீது மிளகுத் தூள் தெளித்து (pepper-spray) அவரைத் தரையில் தள்ளியபோது, அலெக்ஸ் இடையில் புகுந்து தடுத்தார். அவர் கையில் ஒரு தொலைபேசியை வைத்திருந்தார். மத்திய முகவர்கள் அவரைத் தாக்கி கீழே தள்ளியதையும், பிரெட்டியின் இடுப்பில் இருந்த சட்டப்பூர்வமாக அவருக்குச் சொந்தமான துப்பாக்கியை எடுத்து, அவரை 10 முறை சுட்டதையும் வீடியோ ஆதாரங்கள் காட்டுகின்றன. அவர் தரையில் விழுந்து கிடந்தபோதும் மேலும் சில முறைகள் சுடப்பட்டார். இது ஒரு அப்பட்டமான படுகொலை—இது ட்ரம்ப்பின் “கொலை நிறுவனம்” என்று அழைக்கப்படக்கூடிய, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் நாஜி பாணித் தாக்குதல் வலையமைப்பினரால் நடத்தப்பட்டது.
இரக்கமற்ற முறையில் பிரெட்டியைக் படுகொலை செய்த முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளின் அடையாளங்கள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் குற்றத்தைத் தூண்டிய முக்கிய நபர்கள் யாரென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெள்ளை மாளிகையின் தலைமை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டி நோம், சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் (CBP) தளபதி கிரெக் போவினோ மற்றும் FBI இயக்குநர் காஷ் படேல் ஆவர். ஜனவரி 23ம் திகதி போராட்டங்களுக்கு ஒரு நாள் முன்னதாக, துணை ஜனாதிபதி வான்ஸ் மினியாபோலிஸுக்குச் சென்றார். எதற்கும் பின்வாங்கப் போவதில்லை என்றும், ICE மற்றும் CBP எதிர்ப்பாளர்களுக்கு எதிராக, எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்றும் செய்தியை வழங்கவே அவர் அங்கு சென்றிருந்தார்.
மில்லியன் கணக்கான மக்கள் இப்போது அந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ பதிவைப் பார்த்துள்ளனர். என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் திமிராகப் பதிலளிக்கிறார்கள்: “நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள்? எங்களையா அல்லது உங்கள் கண்களையா?”
ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டதைப் போலவே, இந்த வீடியோ ஆதாரமும் மறுக்க முடியாதது. பல முன்னணி ஊடகங்களின் சுயாதீன ஆய்வுகள், பிரெட்டி ஒருபோதும் ஆயுதத்தை எடுக்கவில்லை என்றும், அவர் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளன. இச்சூழ்நிலையில், ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் “சுயாதீன விசாரணை” மற்றும் கூடுதல் “வெளிப்படைத்தன்மை” வேண்டும் என்று கோருகின்றனர். பிரெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பது போல அவர்கள் நாடகமாடுகின்றனர். இது நேரத்தைக் கடத்துவதற்கும், உண்மையை மூடிமறைப்பதற்கும், மக்களின் சீற்றத்தை திசைதிருப்புவதற்கும் செய்யப்படும் ஒரு முயற்சியாகும்.
அலெக்ஸ் பிரெட்டியின் படுகொலை என்பது மினியாபோலிஸில் நடந்து வரும் துணை இராணுவப் படைகளின் பயங்கரத்தின் ஒரு பெரிய விரிவாக்கமாகும். இது கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க நகரங்களுக்குள் இராணுவத்தை அனுப்பி, அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்குத் தீட்டப்பட்ட ஒரு தொடர்ச்சியான சதித்திட்டத்தின் முன்னணி அங்கமாகும்.
இது வெறும் ஊகம் அல்ல. ட்ரம்ப் இதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். அவரது முதல் ஜனாதிபதி பதவிக்காலம் ஒரு சதிப்புரட்சி முயற்சியுடன் முடிந்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், தான் “முதல் நாளிலேயே ஒரு சர்வாதிகாரியாக” இருப்பேன் என்று அவர் அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில், “சில நேரங்களில் உங்களுக்கு ஒரு சர்வாதிகாரி தேவைப்படுவார்” என்று அவர் கூறினார். இவை குற்றவியல் நோக்கத்துடன் கூடிய அரசியல் பிரகடனங்களாகும். இவை இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ட்ரம்ப் நிதியியல் தன்னலக்குழுவின் பிரதிநிதியாக இருக்கிறார். இந்தக் குழு பாசிசத்தை நோக்கித் திரும்பி, அனைத்து வகையான சட்டப்பூர்வத் தன்மைகளையும் முறித்துக் கொள்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகரித்து வரும் வன்முறைக்கு அடியில், அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியால் ஆளும் வர்க்கத்திற்குள் பெருகிவரும் ஒரு பீதி நிலவுகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் 5,000 டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ள தங்கத்தின் விலை உயர்வு, உலக இருப்பு நாணயமாக அமெரிக்க டாலர் தொடர்ந்து சரிந்து வருவதைக் குறிக்கிறது. நாட்டின் கடன் இப்போது 40 டிரில்லியன் டாலரை நெருங்கி வருவதால், அமெரிக்கா அரசு திவாலாகும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. பொருளாதாரம் சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆளும் உயரடுக்கு தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் பாதுகாக்க வெறித்தனமாகவும் ஆவேசமாகவும் செயல்படுகிறது.
ஜனநாயகக் கட்சி அரசியல் யதார்த்தத்தைத் தவிர்ப்பதற்காகத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது. பிரெட்டியின் படுகொலைக்கு பின்னரும்கூட, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அவை சட்டப்பூர்வத் தன்மையிலிருந்து ஒரு அடிப்படை முறிவு கிடையாது என்றும், அரசியலமைப்பை தூக்கியெறியும் சதி அல்ல என்றும் ஒரு கற்பனையான கட்டுக்கதையை அது தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
காணொளிகளில் பதிவு செய்யப்பட்ட யதார்த்தத்திற்கும், ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனமான மற்றும் திசைதிருப்பும் அரசியல் கதையாடலுக்கும் இடையே உள்ள முரண்பாடு, ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட தலையங்கத்தில் அம்பலமாகியுள்ளது.
“ட்ரம்ப் நிர்வாகம் எங்கள் முகத்திற்கு நேராகப் பொய் சொல்கிறது. காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற தலைப்பில் வெளியான டைம்ஸ் கட்டுரை, பிரெட்டி ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை என்பதையும், பட்டப்பகலில் அவர் கொல்லப்பட்டார் என்பதையும் ஒப்புக்கொள்கிறது. வீடியோ ஆதாரங்கள் அவரது கைகளில் “ஒரு தொலைபேசியைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்பதையும், ஒரு முகவர் ஏற்கனவே அவரது உறையிலிருந்த துப்பாக்கியைப் பறித்த பிறகு “மற்றொரு முகவர் அவரைப் பின்னாலிருந்து சுட்டார்” என்பதையும், மத்திய அரசு “சர்வாதிகார ஆட்சிகளைப் போலப் பொய் சொல்கிறது” என்பதையும் ஒப்புக்கொள்கிறது.
ஆனால் அதே கட்டுரை, “மினியாபோலிஸ் தெருவில் சரியாக என்ன நடந்தது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவது முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவாகும்” என்று பிரகடனப்படுத்துகிறது.
இது மிகவும் அபத்தமானது. வீடியோ காட்சி தெளிவாக உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் டைம்ஸ் நிறுவனத்தாலேயே ஒவ்வொரு சட்டகமாக (frame by frame) ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பல கோடி மக்கள் எடுக்கும் முடிவு “முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு” அல்ல. அது முற்றிலும் சரியானது.
பிரெட்டியின் படுகொலையைத் தொடர்ந்து, முன்னணி ஜனநாயகக் கட்சியினர் செனட்டில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான நிதியைத் தடுப்பதற்கான வாய்ப்பை எழுப்பியுள்ளனர்—இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தாலும், நிரந்தர நிதி ஒதுக்கீடுகள் மூலம் பெரும்பாலும் நிதியளிக்கப்படும் ICE தனது செயல்பாடுகளை நிறுத்தப் போவதில்லை. மற்றவர்கள் குடியரசுக் கட்சியினரிடம் ட்ரம்ப்பிற்கு எதிராக “தைரியமாகச் செயல்படுங்கள்” (பிரதிநிதி ஏஞ்சிகிரேக்) என்றும் “குரல் கொடுங்கள்” (செனட்டர் ஏமி க்ளோபுச்சார்) என்றும் முறையிடுகின்றனர். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் அதன் அரசியல் சதிகாரர்களுக்கும் முன்னால் மண்டியிடுகின்றனர்.
வருகின்ற நவம்பரில் நடக்கவுள்ள “தேர்தல்களுக்காகக் காத்திருங்கள்” —இன்னும் கிட்டத்தட்ட 10 மாதங்கள் உள்ளன— என்ற கோரிக்கைகளைப் பொறுத்தவரை, அத்தகைய தேர்தல்கள் நடக்கும் என்பதற்கோ அல்லது அவை ஜனநாயகமான சூழலில் நடைபெறும் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது. சனிக்கிழமையன்று, நீதித்துறை ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதில் தகுதி மதிப்பாய்வுக்காக மினசோட்டா மாநிலத்தின் முழு வாக்காளர் பதிவு தரவுத் தளத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த இறுதி எச்சரிக்கைகள் வாக்களிக்கும் உரிமையைச் சிதைப்பதையும், 2026 தேர்தலை முறைகேடாக நடத்துவதற்குத் தயாராவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
பேர்னி சாண்டர்ஸ், அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் பிறர் மினியாபோலிஸிலிருந்து ICE வெளியேற வேண்டும் என்று கோரி அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் இது எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான எந்த முன்மொழிவையும் அவர்கள் முன்வைக்கவில்லை, அல்லது ICE யைக் கலைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரவில்லை. அவர்களின் பங்கு எதிர்ப்பை ஒருங்கிணைப்பது அல்ல, மாறாக அடக்குமுறையைச் செயல்படுத்தும் அதே நிறுவனங்களிடம் முறையிடுவதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்ற மாயையை வளர்ப்பதே ஆகும்.
தொழிற்சங்க எந்திரம், தன் பங்கிற்கு, ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான தொழிலாளர்களின் உண்மையான போராட்டத்தை அடக்கவும் முடக்கவும் முயல்கிறது.
அலெக்ஸ் பிரெட்டி, அமெரிக்க அரசு ஊழியர்களின் கூட்டமைப்பின் (AFGE) உறுப்பினராக இருந்தார்; அந்த அமைப்பு அவரது கொலைக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை. சனிக்கிழமை மதியம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், AFGE தலைவர் எவரெட் கெல்லி “சம்பவத்தின் விவரங்கள் இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன” என்று கூறி, “அமைதி காக்குமாறு” அழைப்பு விடுத்தார். அவர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) பொய்களை சட்டபூர்வமானவை என்று முன்வைத்தார். ஆனால், வீடியோ ஆதாரங்களால் அவை “கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். இருப்பினும், உண்மையில் என்ன நடந்தது என்பதில் எந்த ஒரு “கேள்வியும்” இல்லை.
AFL-CIO தொழிற் சங்கத்தின் தலைவர் லிஸ் ஷுலர் “துக்கம்” மற்றும் “பொறுப்புக்கூறல்” பற்றி வெற்று வார்த்தைகளை உதிர்த்ததோடு, விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். மினசோட்டா AFL-CIO, “பெருநகர தீவிர கண்காணிப்பு நடவடிக்கை” என்பது அரசியல் பழிவாங்கல் என்று கண்டனம் செய்தது. ஆனால், தொழிலாளர்களைத் அணிதிரட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத AFL-CIO, பொது வேலைநிறுத்தத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே பெரும் ஆதரவு இருந்தபோதிலும், ஒரு சிறு வெளிநடப்புக்குக் கூட அழைப்பு விடுக்கவில்லை.
ஜனநாயகக் கட்சியினரும் தொழிற்சங்க எந்திரமும் எதைத் தடுக்க முயல்கின்றனவென்றால், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ தன்னலக்குழுவுடன் நேருக்கு நேர் மோதிவிடக் கூடாது என்பதையே ஆகும். இந்தத் தன்னலக்குழுதான் அரசின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கட்டுப்படுத்துகிறது. சட்டப்பூர்வ அல்லது ஜனநாயக ரீதியாக தனது நலன்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலைநாட்ட முடியாத காரணத்தினால் இது ட்ரம்ப்பை உயர்த்தியுள்ளது.
காங்கிரஸ் முதல் நீதிமன்றங்கள் வரை, தொழிற்சங்க அதிகாரத்துவம் முதல் ஜனநாயகக் கட்சி வரை, தற்போதுள்ள எந்த நிறுவனமும் பாசிசத்தை நோக்கி செல்வதைத் தடுக்க எதையும் செய்யப்போவதில்லை. சொல்லப்போனால், ட்ரம்ப் அமெரிக்க நகரங்களுக்குள் படைகளை அனுப்பத் தொடங்கினால், அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து அவர் எந்தவொரு அர்த்தமுள்ள எதிர்ப்பையும் எதிர்கொள்வார் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இறுதி ஆய்வில், முதலாளித்துவ அமைப்புமுறையையும் தன்னலக்குழுக்களின் செல்வ வளத்தையும் பாதுகாப்பதில் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புடன் இணைந்து நிற்கிறார்கள். அவர்களின் மிகப்பெரிய பயம் இராணுவ-போலீஸ் சர்வாதிகாரம் அல்ல, மாறாக அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, தற்போதுள்ள செல்வக் குவிப்புக்கும், முதலாளித்துவ அடிப்படையில் அமைந்துள்ள சமூகக் கட்டமைப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தைப் பற்றியதாகும்.
ஆனால், அரசியல் ஸ்தாபகத்தின் செயலிழப்பு மற்றும் உடந்தையான போக்கிற்கு அடியில், ஒரு அரசியல் மற்றும் சமூக தீவிரமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கு கட்டவிழ்ந்து வருகிறது. நாடு முழுவதும், மக்களின் கோபமும் ஆத்திரமும் அடிமட்டத்திலிருந்து உருவாகி வருகின்றன. ஒரு பொது வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்த பேச்சுக்கள் பெருகி வருகின்றன. பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த கலந்துரையாடல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஜனவரி 23 அன்று நடந்த பிரம்மாண்டமான போராட்டங்கள், இந்த வளர்ந்து வரும் இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கை தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்தோ, ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளிடமிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவிலிருந்தோ வரவில்லை. இது தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கு பிரிவினரிடமிருந்து எழுந்தது. வெறும் போராட்டம் மட்டுமே போதுமானதல்ல என்பதையும், தொழிலாள வர்க்கத்தால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த பாரிய நடவடிக்கையால்தான் ட்ரம்ப் ஆட்சியத் தோற்கடிக்கவும், அரசு வன்முறையை நிறுத்தவும் முடியும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தொழிலாள வர்க்கம் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒரு நேரடி மோதல் போக்கில் உள்ளது. இந்த இயக்கம் எவ்வாறு நனவுபூர்வமாக உருவாக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதே இப்போது தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பின்வரும் கோரிக்கைகளுடன் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் பின்வருமாறு முன்மொழிகிறது:
- மினியாபோலிஸ் மற்றும் ஏனைய அனைத்து நகரங்களிலிருந்தும் ICE முகவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்;
- ICE அமைப்பைக் கலைக்க வேண்டும் மற்றும் கொலை மற்றும் வன்முறைக்கு பொறுப்பான அதன் அனைத்து அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்;
- புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்;
- அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட உரிமைகளை முறையாக மீறியது உட்பட, இந்த குற்றங்களுக்கு காரணமான ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் பதவி விலக வேண்டும் மற்றும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல, ஒவ்வொரு பணியிடம், பள்ளி மற்றும் சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அழைப்பு விடுக்கிறது. இவை ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும், தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். மேலும் வெகுஜன நடவடிக்கைகளைத் தயாரித்தல், நம்பகமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தில் பல்வேறு தொழில்துறைகளையும் மாநிலங்களையும் இணைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) என்பது அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் இத்தகைய குழுக்களின் வளர்ச்சியை ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே உருவாகி வரும் முன்னெடுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மினியாபோலிஸ் மற்றும் அதற்கும் அப்பால் உள்ள சுற்றுப்புறங்களில், ICE சோதனைகளை எதிர்க்கவும், புலம்பெயர்ந்தவர்களைப் பாதுகாக்கவும் மக்களிடையே நேரடியாகச் செயல்படும் அமைப்புகள் திரட்டப்பட்டுள்ளன. இவை விரிவுபடுத்தப்பட்டு அனைத்துத் துறை தொழிலாளர்களுடனும் (கல்வியாளர்கள், வாகன மற்றும் தளவாடத் தொழிலாளர்கள், அமேசான் மற்றும் யுபிஎஸ் ஓட்டுநர்கள், ரயில் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள், சேவை மற்றும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் உட்பட) இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் பணியிடங்களை எதிர்ப்பு மற்றும் அரசியல் அமைப்பின் மையங்களாக மாற்ற வேண்டும்.
சோ.ச.க. (SEP) நாடு முழுவதும் உள்ள செவிலியர்களுக்கு ஒரு சிறப்புக் கோரிக்கையை முன்வைக்கிறது. அலெக்ஸ் பிரெட்டி உங்களில் ஒருவராக இருந்தார். மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சுகாதாரப் பணியாளர், அவர் அரசால் படுகொலை செய்யப்பட்டார். இலாபத்தை நோக்கமாகக் கொண்ட சுகாதார அமைப்பால் திணிக்கப்பட்ட சகிக்க முடியாத மற்றும் ஆபத்தான நிலைமைகளுக்கு எதிராக செவிலியர்களின் எதிர்ப்பு அலை அதிகரித்து வரும் சூழலில் அவரது படுகொலை நடந்துள்ளது. நியூ யோர்க்கில் 15,000ம் செவிலியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் கலிபோர்னியா மற்றும் ஹவாயில் திங்கள்கிழமை காலை தொடங்கிய 31,000ம் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவை இதற்குச் சான்றாகும்.
சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்குமாறு மாணவர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் எதுவும் நடக்காதது போல் திரும்பக் கூடாது. சோசலிச சமத்துவக் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), வெளிநடப்புகளை ஒருங்கிணைக்கவும், தொழிலாள வர்க்கத்துடன் இணையவும் குழுக்களை அமைக்குமாறு வலியுறுத்துகிறது. தொழிற்சாலைகளுக்கும், வணிக ரீதியான பொருட்களைச் சேமித்து வைக்கும் குடோன்களுக்கும் செல்லுங்கள்.
மினியாபோலிஸில் நடப்பது, ஜனநாயக உரிமைகளை நசுக்கவும், பெருநிறுவன மற்றும் நிதித்துறை தன்னலக்குழுக்களின் சார்பாக ஒரு சர்வாதிகாரத்தை நிறுவவும் தீட்டப்பட்ட நாடு தழுவிய சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகும். இதற்குப் பதிலடியாக கோடிக்கணக்கான மக்களுக்கான இயக்கம் உருவாக வேண்டும். சர்வாதிகாரத்தை தோற்கடிக்கத் தேவையான அரசியல் நனவு மற்றும் புரட்சிகரத் வேலைத்திட்டங்களுடன் அந்த இயக்கம் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்
இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், இதை உங்கள் சக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதை சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொள்ளுங்கள், உறுப்பினராக விண்ணப்பியுங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான இயக்கத்தைக் கட்டியெழுப்புங்கள்.
