மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC), கடந்த புதன்கிழமை அன்று தீர்மானம் 2817ஐ (2026) நிறைவேற்றியதன் மூலம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை திறம்பட உறுதிப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களை இந்தத் தீர்மானம் “மிகக் கடுமையான சொற்களால் கண்டிக்கிறது”. அதேவேளை, 9 கோடி மக்கள் வாழும் ஈரானின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான இஸ்ரேலும் கடந்த இரண்டு வாரங்களாக நடத்தி வரும் தொடர் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் குறித்து இந்தத் தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை.
இந்தத் தீர்மானத்தின் சாக்குபோக்கு என்னவென்றால், பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படை தலைமையகம் முதல் கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா வரை ஏழு நாடுகளுக்கு —பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலுள்ள ஏழு அமெரிக்க இராணுவ தளங்களும் ஈரான் மீதான போரை நடத்த தீவிரமாக பயன்படுத்தப்படுகின்றன— எதிராக ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தியது என்பதாகும். இந்த நாடுகள் வெறும் நடுநிலையான பார்வையாளர்கள் அல்ல. இவை நடைமுறையில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளே ஆகும். இந்த நாடுகளின் எல்லைகளுக்குள் ஈரான் தற்காப்புக்காக நடத்திய தாக்குதல்களில் சுமார் 11 பொதுமக்களே கொல்லப்பட்டனர். ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் நடத்திய தாக்குதல்களில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானம், பாசிச டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா, பிப்ரவரி 28 அன்று வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான ஈரானுக்கு எதிராகத் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியதைக் கூடக் குறிப்பிடவில்லை. தனது சீயோனிசக் (இஸ்ரேல்) கூட்டாளியின் திறமையான உதவியுடன், வாஷிங்டன் சில மணிநேரங்களிலேயே ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி மற்றும் டசின் கணக்கான பிற முன்னணி அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகளை இலக்கு வைத்துப் படுகொலை செய்தது.
இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், சரமாரியாக மேற்கொண்ட குண்டுவீச்சில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஏவுகணைகள் ஆயிரக்கணக்கான ஈரானியப் பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளன. இதில் ஒரு பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட ஒற்றைத் தாக்குதலில் மட்டும் 160-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்தப் போர்க் குற்றவாளிகள் டசின் கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைத் தாக்கியுள்ளனர், எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்கவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அழிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை நச்சுப்படுத்தவும் முயன்றுள்ளனர். மேலும், சீயோனிச ஆட்சி வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு ஈரான் மற்றும் லெபனானில் மில்லியன்கணக்கான மக்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இவை எதைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு கூட ஜ.நா தீர்மானத்தில் இடம்பெறவில்லை.
இந்தத் தீர்மானம் 13-க்கு 0 என்ற வாக்கு கணக்கில் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா பிரதிநிதிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களை அப்படியே நகலெடுத்தது போன்ற தொனியில் அமைந்த அந்த செய்திக்குறிப்பில், “குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது ஈரானின் தாக்குதல்களைக் கண்டிப்பதோடு, அவற்றை உடனடியாக நிறுத்தக் கோருகிறது. அதே நேரத்தில், கடல்சார் வர்த்தகத்தில் தலையிடும் நோக்கிலான அதன் அச்சுறுத்தல்கள், தூண்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள அதன் பினாமி குழுக்களுக்கான ஆதரவு ஆகியவற்றையும் தெஹ்ரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொடுரமான ஆவணத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன், தற்காலிக உறுப்பினர்களான பஹ்ரைன், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, டென்மார்க், கிரீஸ், லாட்வியா, லைபீரியா, பாகிஸ்தான், பனாமா மற்றும் சோமாலியா ஆகியவையும் அடங்கும்.
குறிப்பாக, ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ரஷ்யாவும் சீனாவும் இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தும் (veto) அதிகாரத்தைக் கொண்டிருந்தும், அதற்குப் பதிலாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்று, தீர்மானம் நிறைவேற அனுமதித்தது மிக முக்கியமானதாகும். இதன் மூலம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழித்தொழிப்புப் போருக்கு அவர்கள் அரசியல் ரீதியான ஆதரவை வழங்கியுள்ளனர். ஒரு பரிதாபகரமான முகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக, ரஷ்யா ஒரு இரண்டாவது தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானம் ஒருபோதும் நிறைவேறாது என்பது அதற்குத் தெரியும். அது போரை நிறுத்தவும், ஒரு இராஜதந்திர தீர்வை எட்டவும் அழைப்பு விடுத்தது. பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே அதனை ஆதரிக்கும் நிலைக்கு முன்வந்தனர்.
இந்த பரிதாபகரமான செயல்பாடானது, இந்த இரு முதலாளித்துவ ஆட்சிகளின் சமூகத் தன்மை மற்றும் அதன் நலன்களிலிருந்து உருவானதாகும். நேட்டோ நாடுகள் ரஷ்யாவை முறையாகச் சூழ்ந்து கொண்டிருப்பதும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை அவை தூண்டியது தெரிந்திருந்த போதிலும், ரஷ்ய தன்னலக்குழுக்கள் தங்கள் சொந்த தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கும், ஒரு செல்வாக்கு மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதற்குமான “உரிமையை” அங்கீகரிக்கும் ஒரு சமரசத்தை வாஷிங்டனுடன் எட்ட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்.
ஈரானை வாஷிங்டன் நிர்மூலமாக்குவதற்கும் அதன் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும் ஆதரவளிப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்துடன் “அமைதியான சகவாழ்வு” எனும் பழைய ஸ்டாலினிச மந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் கிரெம்ளின், உக்ரேன் விவகாரம் மற்றும் அமெரிக்க முதலீடுகள் குறித்து ட்ரம்புடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முடியும் என்று நம்புகிறது.
ஷி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த மாத இறுதியில் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் ஒரு முக்கிய உடனடி காரணியாக இருக்கிறது. சீன முதலாளித்துவமானது அமெரிக்காவுடன் ஒரு பொருளாதார உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, போர்க் குற்றவாளி ட்ரம்பிற்கு ஒரு இராஜதந்திர வெற்றியை வழங்க, சீன ஸ்டாலினிச ஆட்சி தயாராக உள்ளது. இது அதன் பெயரளவு கூட்டாளியான ஈரானின் இழப்பில் செய்யப்படுகிறது.
ஆனால் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவின் ஆளும் கும்பல்கள் கொண்டுள்ள கற்பனைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத் தேவைகளுடன் ஒத்துப்போகாதவை ஆகும். உலகின் வளங்களையும், பகுதிகளையும் வல்லரசுகளுக்கு இடையே மீண்டும் ஒருமுறை பிரித்தெடுக்கும் செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. அமெரிக்கா தனது மேலாதிக்க நிலைக்கு விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் அமைதியாக ஏற்கப்போவதில்லை. மாறாக, அடுத்த இலக்கு நீங்கள்தான் என்ற செய்தியை வாஷிங்டன் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவிற்கு அனுப்பி வருகிறது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, வாஷிங்டன் தனது வேகம் பெற்று வரும் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட, இன்னும் தன்னிடம் மிஞ்சியிருக்கும் மிகப்பெரிய இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்தித் தொடர்ச்சியான இரத்தக்களரியான ஆக்கிரமிப்புப் போர்களை முன்னெடுத்து வருகிறது. இந்த வரிசையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போரானது, முதலாவதாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குப் பெரும் தடையாக இருக்கும் ஒரு பிராந்திய சக்தியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய கிழக்குப் பிராந்தியமானது ஒரு முக்கியமான எரிசக்தி ஏற்றுமதி மண்டலமாகவும், ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகப் பாதைகளின் மூலோபாய மையமாகவும் திகழ்கிறது.
இருப்பினும், இந்தப் போரின் மிக அடிப்படையான இலக்கு, ரஷ்யா மற்றும் சீனாவை மேலும் மூலோபாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்துவதாகும். குறிப்பாகச் சீனா தனது மலிவான ஈரானிய எண்ணெய் இறக்குமதியையே கணிசமாக நம்பியுள்ளது. இந்தப்போர், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வாஷிங்டன் கடத்திச் சென்று, காரகாஸில் ஒரு இணக்கமான பொம்மை அரசாங்கத்தை நிறுவிய இரண்டு மாதங்களுக்குள்ளாகவே தொடங்கியுள்ளது. ஜனவரி 2026 வரை சீனாவுக்கு மற்றொரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்த வெனிசுவேலா, இப்போது அமெரிக்க எரிசக்தி பெருநிறுவனங்களின் ஒரு சிற்றரசாக மாற்றப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப் போரின் கோரங்களுக்குப் பிறகு, சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திரத்தால் விதிக்கப்பட்டிருந்த மற்றும் எஞ்சியிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தூக்கியெறிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விளக்கியது போல, “நாகரிகத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் பிரித்துக் காட்டும் அனைத்து ‘சிவப்புக் கோடுகளும்’ அழிக்கப்பட்டு வருகின்றன.” ஈரானுக்கு எதிரான இந்த அழித்தொழிப்புப் போர், புதன்கிழமை நடந்த வாக்கெடுப்பின் மூலம் 140-க்கும் மேற்பட்ட அரசாங்கங்கள் தீர்மானம் 2817-க்கு இணை ஆதரவு வழங்கியதன் வாயிலாக அங்கீகார முத்திரையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாகவே காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஏகாதிபத்திய ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை அரங்கேறியது. இந்த மனிதப் பேரழிவிற்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள் ஆதரவு வழங்கின. அவர்கள் சீயோனிசக் கொலைகாரர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது மட்டுமின்றி, தங்கள் சொந்த நாடுகளில் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்த அனைத்து வகையான எதிர்ப்புகளையும் திட்டமிட்டு ஒடுக்கினர்.
உலகின் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசின் தலைவராக இருக்கும் ட்ரம்ப், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் மிகவும் விகாரமான மற்றும் அருவருப்பான வெளிப்பாடாகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் அவர் நடத்தும் ஆக்கிரமிப்புப் போர்கள், உள்நாட்டில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அவரது நடவடிக்கைகளுடன் கைகோர்த்துச் செல்கின்றன.
ஆனால், ஆளும் வர்க்கத்தின் திசைவழி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. இந்த வாரத்தில் தான், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆற்றிய உரையில், “சென்றுவிட்ட மற்றும் இனி ஒருபோதும் திரும்ப வராத ஒரு பழைய உலக ஒழுங்கின் பாதுகாவலராக ஐரோப்பா இனி இருக்க முடியாது” என்று அறிவித்தார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது நாட்டின் அணு ஆயுதக் குதங்களை விரிவுபடுத்துவதோடு, கண்டம் முழுவதும் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதாக உறுதியளிக்கிறார். அதே நேரத்தில் ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு, தனது இராணுவத்திற்காக 1 டிரில்லியன் யூரோக்களை செலவிடுவதன் மூலம் உலக அதிகாரத்தைக் கைப்பற்ற மற்றொரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தப் போர் வரவு செலவுத் திட்டங்களின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதோடு, கண்டம் முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், தீவிர வலதுசாரி கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வழி வகுத்து வருகின்றன.
மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அரசாங்க அதிகாரிகள், புத்திசாலித்தனமான இராஜதந்திரம் மற்றும் போட்டியிடும் தேசிய அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மறுசீரமைப்பதன் மூலம் ஒரு “பலமுனை” முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடாக ஏகாதிபத்திய உலகப் போரைத் தவிர்த்துவிடலாம் என்று நம்புவது ஒரு மாயையாகும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் யூனியனைக் கலைத்துவிட்டு முதலாளித்துவத்தை மீட்டெடுத்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகள் தங்களை வல்லரசுகளின் வட்டத்திற்குள்ளும், உலக முதலாளித்துவ சந்தைக்குள்ளும் இருகரம் கூப்பி வரவேற்பார்கள் என்று முன்னணி ஸ்டாலினிச அதிகாரிகள் தங்களைத் தாங்களே நம்பவைத்துக் கொண்டனர். அப்போதைப் போலவே இப்பொழுதும், முதலாளித்துவ வளர்ச்சிக்கான அவர்களின் தேசியத் திட்டங்கள், பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும், உலகத்தை தேசிய அரசுகளாகப் பிரிப்பதற்கும் இடையிலான உலக முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாட்டுடன் மோதிக் கொள்கின்றன —இந்த முரண்பாடுதான், வல்லரசுகளை ஒரு மூன்றாவது உலகப் போரை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
1930-களில், முதலாளித்துவ முறிவின் முந்தைய காலகட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி இந்த நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஏகாதிபத்திய சக்திகள் இரண்டாம் உலகப் போரை நோக்கி விரைந்து கொண்டிருந்த வேளையில், சோவியத் யூனியனின் ஸ்டாலினிச அதிகாரத்துவமானது, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் எஞ்சியிருந்த அனைத்து அடையாளங்களையும் முற்றிலுமாகக் கைவிட்டது. அது கம்யூனிச அகிலத்தை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பிரதான சீர்குலைப்பாளராகவும். காட்டிக்கொடுப்பாளராகவும் மாற்றியது. மேலும், தனது அதிகாரத்துவச் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தேசங்களின் கழகம் மூலம் ஏகாதிபத்தியவாதிகளுடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்தெடுப்பதில் சோவியத் யூனியனின் வெளியுறவுக் கொள்கையை ஒருமுகப்படுத்தியது.
ஏகாதிபத்திய இராஜதந்திரத்தின் புனைகதையை கடுமையாகச் சாடிய ட்ரொட்ஸ்கி 1936-ல், “தேசங்களின் கழகம், தற்போதைய நிலையை பாதுகாப்பதுக்கான ‘அமைதியை’ ஏற்படுத்தும் அமைப்பல்ல. மாறாக, மனிதகுலத்தின் பெரும்பான்மையினருக்கு எதிராக, ஏகாதிபத்திய சிறுபான்மையினர் நடத்தும் வன்முறைக்கான ஓர் அமைப்பாகும். இந்த ‘ஒழுங்குமுறையை’ இன்று காலனிகளிலும், நாளை வல்லரசுகளுக்கு இடையிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் சிறிய மற்றும் பெரிய போர்களின் உதவியால் மட்டுமே நிலைநிறுத்த முடியும்” என்று எழுதினார்.
ஏகாதிபத்தியப் போரைத் தடுப்பதற்கான ஒரே அடிப்படை, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே ஆகும். ஈரானுக்கு எதிரான போரை நிறுத்துவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சோசலிச வலைத் தளத்தின் இணையக் கருத்தரங்கில் டேவிட் நோர்த் வலியுறுத்தியது போல, சோசலிஸ்டுகள் “போரின் வரைபடத்தைப் பின்பற்றக் கூடாது, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்ற வேண்டும்.”
இந்த நோக்குநிலையின் அவசரத் தேவையை ஐ.நா பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஈரானிய வெகுஜனங்கள் படுகொலை செய்யப்படுவதற்கோ அல்லது அந்தப் பிராந்தியம் முழுவதும் இன்னும் பல கோடி மக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுவதற்கோ உலகின் எந்தவொரு அரசாங்கத்திடமும் கொள்கை ரீதியான எதிர்ப்பு ஏதுமில்லை. ஆனால், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடையே போருக்கு எதிரான எதிர்ப்பு ஏற்கனவே வலுவாக உள்ளது. போரின் பொருளாதார விளைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும்போது இந்த எதிர்ப்பு இன்னும் தீவிரமடையும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்த வளர்ந்து வரும் இயக்கத்தை, ஏகாதிபத்தியப் போரின் மூல காரணமான முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான ஒரு சோசலிசத் திட்டத்துடன் ஆயுதபாணியாக்குவதே இப்போதைய பணியாகும்.
