மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்கா, ஈரான் மீதான தனது கடற்படை முற்றுகையை, எந்தவொரு கடற்பரப்பிலும் கப்பல் போக்குவரத்திற்கு எதிரான ஒரு உலகளாவிய நடவடிக்கையாக விரிவுபடுத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கியதற்காக சீனாவின் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மீது அமெரிக்கக் கருவூலத் துறை தடைகளை விதித்தது.
“எமது முற்றுகை வலுத்து வருவதுடன் உலகளாவிய ரீதியில் விரிவடைந்து வருகிறது,” என்று ஏப்ரல் 24 அன்று பென்டகனில் செய்தியாளர்களிடம் ஹெக்செத் தெரிவித்தார். “அமெரிக்கக் கடற்படையின் அனுமதியின்றி எவரும் ஹோர்முஸ் நீரணையிலிருந்து உலகின் எந்தப் பகுதிக்கும் பயணிக்க முடியாது.” இந்த மாதம் முற்றுகை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் இரண்டு ஈரானிய கப்பல்களை அமெரிக்கக் கடற்படை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே ஏப்ரல் 8-ம் தேதி நடைமுறைக்கு வந்த பெயரளவிலான போர்நிறுத்தம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் செவ்வாய்க்கிழமை காலவரையறையின்றி நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த விரிவாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த முற்றுகையும் தடைகளும் சீனாவை இலக்காகக் கொண்டுள்ளன. இலங்கைக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வங்காள விரிகுடா கடல்பகுதியில், சீன சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் சென்றுகொண்டிருந்த சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த எம்/டி டிபானி (M/T Tifani) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படை இந்த வாரம் கைப்பற்றியது. ஈரானிய எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளதுடன், தனது கச்சா எண்ணெய் தேவையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு ஈரானையே சார்ந்துள்ளது.
ஈரானிய எண்ணெயை வாங்கியதாகக் குற்றம் சாட்டி, சீனாவின் டாலியன் (Dalian) துறைமுகத்தில் நாளொன்றுக்கு சுமார் 400,000 பீப்பாய்களைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஹெங்லி பெட்ரோகெமிக்கல் என்ற தனியார் சுத்திகரிப்பு ஆலையின் மீது அமெரிக்கக் கருவூலத் துறை வெள்ளிக்கிழமை இரண்டாம் நிலைத் தடைகளை விதித்தது. மேலும், 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது கருவூலத் துறை தடைகளை விதித்ததுடன், ஈரானிய இடைத்தரகர்களால் பயன்படுத்தப்பட்ட 344 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி நாணய பரிமாற்றங்களையும் முடக்கியது.
வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறுகையில், இந்தத் தடைகள் “சர்வதேச வர்த்தக ஒழுங்கு மற்றும் விதிகளைச் சீர்குலைக்கின்றன” என்றும் “சீன நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை மீறுகின்றன” என்றும் தெரிவித்தார். ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹெக்செத்துடன் உடனிருந்த அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன், உலகம் முழுவதிலும் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு “நீங்கள் இந்த முற்றுகைக்கு இணங்கவில்லை என்றால், நாங்கள் பலத்தைப் பயன்படுத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் கெய்ன் கூறுகையில், அமெரிக்கப் படைகள் “நிச்சயமாக ஒரு கண நேர அறிவிப்பில் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், மூன்று ஏவுகணை வழிகாட்டி நாசகாரிக் கப்பல்கள் மற்றும் 5,000 மாலுமிகளுடன் மத்திய கிழக்கு போர் மண்டலத்திற்குள் நுழைந்த அன்றே இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தால் இப்பகுதிக்கு நகர்த்தப்பட்ட மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பல் இதுவாகும். இந்த மூன்று விமானம் தாங்கி தாக்குதல் அணிகளும் தற்போது 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் 15,000 மாலுமிகள் மற்றும் கடற்படையினர்களைக் கொண்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் பாக்ஸர் நீர்நிலத் தாக்குதல் ஆயத்தக் குழுவுடன் மேலும் 4,200 கடற்படையினர்கள் வந்து சேருவார்கள். 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய கிழக்கில் நடைபெறும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படைக் குவிப்பு இது என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதே பென்டகன் செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்தப் போரில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஹெக்செத், “பேசுவதைக் குறைத்துக்கொண்டு, ஐரோப்பாவில் ஆடம்பரமான மாநாடுகளை நடத்துவதை நிறுத்திவிட்டு, கப்பலில் ஏறுங்கள்” என்று அவர்களிடம் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை கொள்கைக்கான துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பியால் எழுதப்பட்டு, ஏப்ரல் 24 அன்று பொலிட்டிகோ பத்திரிகைக்கு கசிந்த பென்டகன் குறிப்பாணை ஒன்று, ஹோர்முஸ் நீரிணை முற்றுகையை அமல்படுத்த போர்க் கப்பல்களை அனுப்ப மறுக்கும் நேட்டோ உறுப்பு நாடுகளை முறைப்படி தண்டிக்குமாறு முன்மொழிகிறது. ஸ்பெயினை நேட்டோவின் திட்டமிடல் கூட்டங்களில் இருந்து வெளியேற்றவும், போக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான பிரித்தானியாவின் உரிமையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கவும், அமெரிக்க உளவுத் தகவல்களைப் பெறுவதற்கான பிரான்ஸின் அனுமதியைத் துண்டிக்கவும் மற்றும் ஜேர்மனிய இராணுவத்துடனான கூட்டுப் பயிற்சிகளை ரத்து செய்யவும் இந்தக் குறிப்பு பரிந்துரைக்கிறது. இந்த இலக்குகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலான நட்பு நாடுகள் மீதாகும். அமெரிக்கா, நேட்டோவுடன் கலந்தாலோசிக்காமலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தைப் பெறாமலும் ஈரான் மீதான போரைத் தொடங்கியது.
ஈரான் மீதான தனது குண்டுவீச்சை மீண்டும் தொடங்குவதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார். “முதலாவதாக கொமேனி வம்சத்தை முற்றிலுமாக அழிப்பதற்கும், மேலும், முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார வசதிகளை அழித்து, அதன் தேசிய பொருளாதார உள்கட்டமைப்பைச் சிதைப்பதன் மூலம் ஈரானை இருண்ட காலத்திற்கும் கற்காலத்திற்கும் தள்ளுவதற்கும் நாங்கள் அமெரிக்காவின் பச்சை விளக்கிற்காக (அனுமதிக்காக) காத்திருக்கிறோம்,” என்று காட்ஸ் கூறினார். தாக்குதல் மீண்டும் தொடங்கும்போது, ”அது வித்தியாசமாகவும் கொடியதாகவும் இருக்கும், மிகவும் முக்கியம் வாய்ந்த இடங்களில் பேரழிவுகரமான தாக்குதலை கொண்டிருக்கும்” என்றும் காட்ஸ் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 25 ஆம் தேதிக்கான அல் ஜசீராவின் நேரடி கண்காணிப்புத் தரவுகளின்படி, ஈரானுக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்துள்ளது. இதில் 376 பிள்ளைகள் மற்றும் 496 பெண்கள் அடங்குவர். மேலும் 26,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானிய செம்பிறைச் சங்கம் 125,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவோ அல்லது அழிக்கப்பட்டுள்ளதாகவோ தெரிவிக்கிறது. 700,000 வேலைவாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய தொழிலாளர் சபையின் பொதுச் செயலாளர் அலிரேசா மஹ்ஜூப் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் லெபனானில் போரின் இரண்டாவது முனை தொடங்கியதில் இருந்து 2,294 பேர் கொல்லப்பட்டதாகவும் 7,554 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. இதில் குறைந்தபட்சம் 177 குழந்தைகளும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் மார்ச் மாதத் தாக்குதலின் முதல் 10 நாட்களில், தெற்கு லெபனானில் உள்ள 22 சமூகங்களில் 523 கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் பட ஆய்வுகளை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. அல் ஜசீரா மற்றும் ஹாரெட்ஸ் செய்திகளின்படி, இஸ்ரேலிய அதிகாரிகள் இக்கொள்கையை “காஸா மயமாக்கல்” என்று விவரிக்கின்றனர்.
பென்டகனின் ஏவுகணை கையிருப்புக்கள் போருக்கு முந்தைய மட்டத்தில் இருந்ததிலும் பார்க்க பாதியளவிற்கும் கீழே குறைந்துள்ள நிலையில் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா தனது போருக்கு முந்தைய 2,330 பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளில் 1,430 வரை —அதாவது இருப்பில் 60 சதவீதத்திற்கும் மேலாக— பயன்படுத்திவிட்டதாக மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) இந்த வாரம் தெரிவித்துள்ளது. இவற்றின் ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட 4 மில்லியன் டாலர்கள் ஆகும். “சீனா போன்ற திறமையான சம பலம் வாய்ந்த போட்டியாளருக்கு எதிரான போரில், இந்தப் போரை விட அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. “போருக்கு முந்தைய கையிருப்புக்களே ஏற்கனவே போதுமானதாக இருக்கவில்லை; இன்றைய நிலவரத்தில் எதிர்காலத்தில் ஒரு மோதல் ஏற்பட்டால் இவை அமெரிக்காவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும்” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்தப் போருக்கான பொருளாதாரச் செலவை உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களே செலுத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய் வடகடல் கச்சா எண்ணெய் 106 டாலருக்கு விற்பனையானது. இது போருக்கு முந்தைய அளவை விட சுமார் 60 சதவீதம் அதிகமாகும். தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,697 டாலரை எட்டியது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த சீர்குலைவை “வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி நெருக்கடி” என்று அழைத்துள்ள சர்வதேச எரிசக்தி முகமை (IEA), இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஒருங்கிணைந்த நடவடிக்கையாக 400 மில்லியன் பீப்பாய்கள் இருப்பு எண்ணெயை விடுவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை மே மாத நடுப்பகுதி வரை மூடப்பட்டிருந்தால், வடகடல் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 150 டாலராக உயரும் என ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது.
அமெரிக்காவின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், ஈரான் “அடுத்த இரண்டு, மூன்று நாட்களில்... உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும், இது அவர்களின் எண்ணெய்க் கிணறுகளுக்கு மிகவும் மோசமானதாக அமையும்” என்று தெரிவித்தார். கன்சாஸ் மாநில குடியரசுக் கட்சி செனட்டர் ரோஜர் மார்ஷல், கடந்த புதன்கிழமை நியூஸ்மேக்ஸக்கு வழங்கிய நேர்காணலில் இந்தப் பொருளாதாரத் தடை குறித்துக் கூறுகையில்: “நாம் நிதியியல் ரீதியாகவும், அவர்களால் உணவு உட்கொள்ள முடியாத அளவிற்கும் அவர்களை உண்மையில் பட்டினி போட்டுக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
அதே நேர்காணலில், மார்ஷல் அணு ஆயுதப் போர் விரிவாக்கத்தை ஆதரித்துப் பேசினார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அமெரிக்கா “உள்ளே நுழைந்து இந்தப் பணியை முடிக்க வேண்டியிருக்குமா” என்று கேட்டதற்கு, “அது சரியென்று நான் நினைக்கிறேன். இதற்கு முந்தைய ஜனாதிபதிகளுக்கும் என்ன செய்வது என்பது குறித்து இதே போன்ற சிக்கல்கள் இருந்தன. ஜனாதிபதி ட்ரூமன் அணு குண்டு வீசிய முடிவையும், ஜனாதிபதி ஐசனோவரின் நோர்மண்டி தரையிறக்க (D-Day) முடிவையும் நினைத்துப் பாருங்கள்” என்று அவர் பதிலளித்தார். ட்ரூமன் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அணு ஆயுதங்களால் அழிப்பதுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
