மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மேக் ட்ரக்ஸ் (Mack Trucks) நிறுவனத்தின் சாமானியத் தொழிலாளியும், ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்(UAW) தலைவர் பதவிக்கான சோசலிச வேட்பாளருமான வில் லெஹ்மன், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற UAW கிளை 677 (Local 677) கூட்டத்தில் ஈரான் போருக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்திய போருக்கு எதிராக; தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலுக்காக” என்ற தலைப்பிலான அந்தத் தீர்மானத்தை, ஜூன் 15-18 தேதிகளில் டெட்ராய்டில் நடைபெறவிருக்கும் 39வது UAW அரசியலமைப்பு மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று லெஹ்மன் முன்மொழிந்தார்.
UAW கிளை 677 இல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட இந்தத் தீர்மானம் 7-க்கு 1 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. லெஹ்மன் மட்டுமே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த ஏழு பேரும் சாமானியத் தொழிலாளர்கள் அல்ல, மாறாக அவர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் ஆவர். இவர்கள் 2,400 மேக் ட்ரக்ஸ் தொழிலாளர்கள் இன்றி கூட்டப்பட்ட ஒரு சிறிய அதிகாரத்துவக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் இந்த வாக்களிப்பானது, தேசியத் தலைமை முதல் அடிமட்டம் வரை போரைத் தீவிரமாக ஊக்குவிக்கும் அல்லது அதற்கு முன்னால் ஒரு கோழைத்தனமான மௌனத்தைப் பேணும் போர்-ஆதரவு UAW அதிகாரத்துவ அமைப்பின் ஒரு பொதுவான தன்மையை கொண்டிருக்கிறது.
லெஹ்மன் முன்மொழிந்த தீர்மானம், போரை நிறுத்துவதற்கான தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு சக்திவாய்ந்த அறிக்கையாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறுவப்பட்ட நூரம்பேர்க் முன்னுதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் போரை ஒரு குற்றவியல் நடவடிக்கை என்று தீர்மானம் கண்டிக்கிறது. மேலும் இந்தப் போரின் அதிர்ச்சியூட்டும் மனித உயிரிழப்புகள் மற்றும் அதன் விளைவுகளை இது ஆவணப்படுத்துகிறது.
மேலும் இந்தத் தீர்மானம், வெளிநாட்டில் நடக்கும் போரை உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுடன் நேரடியாக இணைக்கிறது. ஈரானிய நகரங்களின் மீது குண்டுவீசும் அதே அரசாங்கம் தான், உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவமயமாக்கப்பட்ட கூட்டாட்சி முகவர்களை நிலைநிறுத்துகிறது, ரெனி நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி ஆகியோரைக் கொன்றது, மற்றும் இத்தீர்மானம் குறிப்பிடுவது போல “அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் சிறை அமைப்பை” உருவாக்கி வருகிறது.
இந்தத் தீர்மானம், மருத்துவக் காப்பீடு, மருத்துவ உதவி, உணவு உதவி, வீட்டுவசதி மற்றும் கல்வி ஆகியவற்றில் செய்யப்படும் கடுமையான வெட்டுக்களுக்கு மத்தியில், பென்டகனின் 1.5 டிரில்லியன் டாலர் வரவுசெலவுத் திட்டத்தைக் கண்டிக்கிறது. மேலும், நாட்டின் ஒவ்வொரு வாகனத் தொழிற்சாலையின் மீதும் தற்போது தொங்கிக்கொண்டிருக்கும் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுகிறது: அதாவது, வாகன உற்பத்தியைப் போர் ஆயுத உற்பத்தியாக மாற்றுவது என்பது, “வாகனத் தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களைக் கொல்லப் பயன்படும் ஆயுத உற்பத்தியில் ஒருங்கிணைக்கும் செயலாகும்.”
இந்தத் தீர்மானம் போருக்கான பொறுப்பை இரு பெரும் வணிகக் கட்சிகளின் மீதும் நேரடியாகச் சுமத்துகிறது. “ஜனநாயகக் கட்சியானது குடியரசுக் கட்சியுடன் இணைந்து இந்தப் போருக்கு நிதியுதவி அளிப்பதிலும், அதை வழிநடத்துவதிலும் கைகோர்த்துள்ளது. முன்னணி ஜனநாயகக் கட்சியினர் வான்வழித் தாக்குதல்களை ஆதரிக்கின்றனர் மற்றும் செனட் சபையின் போர் அதிகாரத் தீர்மானங்கள் மீண்டும் மீண்டும் தோல்வியடைகின்றன — இது போரை நிறுத்துவதற்கு முதலாளித்துவக் கட்சிகள் மீதோ அல்லது முதலாளித்துவ அரசின் நிறுவனங்கள் மீதோ தொழிலாள வர்க்கம் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது என்பதையும், அது தனது சொந்த சுயாதீனமான வலிமையையே நம்பியிருக்க வேண்டும் என்பதையும் நிரூபிக்கிறது” என்று தீர்மானம் பிரகடனப்படுத்துகிறது.
இந்தத் தீர்மானம் சாமானியத் தொழிலாளர்களின் சுயாதீனமான முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை முன்வைக்கிறது. இந்தப் போரை “தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியும்” என்றும், காங்கிரஸிடம் முறையிடுவதாலோ, ஜனநாயகக் கட்சியினரிடம் அழுத்தம் கொடுப்பதாலோ அல்லது “எந்தவொரு முதலாளித்துவ அரசியல்வாதிகளை” நம்பியிருப்பதாலோ அல்ல என்றும் அது பிரகடனப்படுத்துகிறது. எனவே, ஒவ்வொரு உள்ளூர் கிளைகளிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை அமைப்பதன் மூலம் இந்தத் தீர்மானத்தை “செயல்படுத்துமாறு” அது UAW உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறது. இந்தக் குழுக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமானவையாகவும், அதற்கு அடிபணியாதவையாகவும், பகிரங்கக் கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகவும், உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்புடையவையாகவும், உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.
இந்தக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய பொறுப்புகள் என்ன என்பதை இத்தீர்மானம் குறிப்பிடுகிறது: இந்தத் தீர்மானத்தை ஒவ்வொரு பணி இடத்திற்கும் கொண்டு சென்று, இது குறித்து விவாதிக்கவும் செயல்படவும் உறுப்பினர்களைக் கூட்டுவது; குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையினரின் (ICE) சோதனைகள் மற்றும் நாடு கடத்தல்களுக்கு எதிராகப் புலம்பெயர்ந்த சக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது; வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியை இராணுவ உற்பத்தியாக மாற்றுவதை எதிர்ப்பது; மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சியை எதிர்ப்பதற்கும், ஏகாதிபத்தியப் போரில் ஈடுபட மறுக்கும் எந்தவொரு தொழிலாளி அல்லது இளைஞரைப் பாதுகாப்பதற்கும் தயாராவது ஆகியவையாகும். மேலும், பிற UAW கிளைகள், பிற தொழிற்சங்கங்கள் மற்றும் ஈரான் உள்ளிட்ட சர்வதேச அளவிலான தொழிலாளர்களின் சாமானியக் குழுக்களுடன் நேரடித் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இது அழைப்பு விடுக்கிறது.
இறுதியாக, இந்தத் தீர்மானம் அத்தகைய நிறுவன ரீதியான நடவடிக்கைகளைத் திட்டவட்டமான தொழில்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளுடன் இணைக்கிறது. பொதுச் சபைகளைக் கூட்டுவதற்கும், “வேலை நிறுத்தம் மற்றும் போராட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு” உறுப்பினர்களைத் தயார்படுத்துவதற்கும், அதன் முன்னேற்றம் குறித்து “தவறாமல் மற்றும் பகிரங்கமாக” அறிக்கை அளிப்பதற்கும் இக்குழுக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனைச் செயல்படுத்துவதை “அதிகாரிகள், நிர்வாகிகள் அல்லது தொழிற்சங்க எந்திரத்திடம்” விட்டுவிட முடியாது என்றும், அது “சாமானியத் தொழிலாளர்களின் நனவுப்பூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சுயாதீனமான நடவடிக்கையையே” சார்ந்துள்ளது என்றும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
கிளை 677 எந்திரத்தால் லெஹ்மனின் தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்களிப்பு, அதன் எண்ணிக்கையை விட —உறுப்பினர்களைப் புறக்கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் 7-க்கு 1 என்ற கணக்கு—, அது வெளிப்படுத்தும் உண்மையின் காரணமாகவே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு மூடிய அதிகாரத்துவக் கும்பலாகச் செயல்படும் ஒரு சில அதிகாரிகள், சட்டவிரோதப் போருக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கவும், தாங்கள் பெயரளவில் “பிரதிநிதித்துவப்படுத்தும்” 2,400 மேக் (Mack) தொழிலாளர்களிடையே இது குறித்த விவாதம் நடப்பதைத் தடுக்கவும் முனைந்தனர். இந்த அர்த்தத்தில், இந்த வாக்களிப்பானது ஒட்டுமொத்த UAW எந்திரத்தின் பாத்திரத்தின் ஒரு செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாகும்.
UAW தலைவர் ஷான் பெயின், இந்த எந்திரத்தை போரை முன்னெடுப்பதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய முட்டுக்கொடுக்கும் கட்டையாக நிறுத்தியுள்ளார். ஈரான் போரை எதிர்த்து அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதேசமயம், இரண்டாம் உலகப் போரின் “ஜனநாயகத்தின் ஆயுதக் கிடங்கு” என்ற நச்சுத்தனமான கட்டுக்கதையை அவர் மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் —— இது வாகன உற்பத்தி ஆயுத உற்பத்தியாக மாற்றப்பட்ட, தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமை பறிக்கப்பட்ட மற்றும் “தொழிலாளர் ஒழுக்கத்தை” நிலைநிறுத்துவதற்குப் பதிலாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அரசின் அங்கீகாரமும் நிறுவனச் சலுகைகளும் வழங்கப்பட்ட ஒரு கார்ப்பரேட்டுக்களின் ஏற்பாடாகும்.
ட்ரம்ப்பின் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் வர்த்தகப் போர் முறையை பெயின் ஏற்றுக்கொள்வதும் இதே தர்க்கத்திலிருந்து உருவானதாகும்: அதாவது, தொழிலாளர்களைத் தேசிய ரீதியாகப் பிரிப்பது, அவர்களின் போராட்டங்களை அமெரிக்க முதலாளித்துவத்தின் “தேசிய நலனுக்கு” அடிபணியச் செய்வது, மற்றும் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் தீவிரமடையும் போது தொழிலாளர்களைக் கண்காணிக்கும் அமைப்பாகத் தொழிற்சங்கத்தைத் தயார்படுத்துவது ஆகியவை இதன் நோக்கமாகும்.
வாகனத் தொழிலாளர்களும் அனைத்து UAW உறுப்பினர்களும் லெஹ்மனின் தீர்மானத்தை ஒவ்வொரு ஆலைக்கும் ஒவ்வொரு கிளைக்கும் கொண்டு செல்லவும், அதை வேலைத்தளங்களில் விநியோகிக்கவும், அது முன்வைக்கும் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தவும் WSWS அழைப்பு விடுக்கிறது. தீர்மானம் குறிப்பிடுவது போல, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பல்கலைக்கழகங்களில் தனது பங்களிப்பின் மூலம், போர் இயந்திரத்தை நிறுத்தும் சமூக ஆற்றலைத் தொழிலாள வர்க்கம் கொண்டுள்ளது. இது அமைப்பு மற்றும் தலைமைத்துவத்தைப் பொறுத்தது: அதாவது, தொழிலாளர்களின் கூட்டுப் பலம் நனவுப்பூர்வமாக அணிதிரட்டப்படுகிறதா அல்லது தொழிலாளர்களை அரசியல் ரீதியாக ஆயுதபாணியற்றவர்களாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் வைத்திருப்பதன் மூலம் சலுகைகளைப் பெறும் அதிகாரிகளால் அது நசுக்கப்படுகிறதா என்பதே இங்கு முக்கிய வினாவாகும்.
சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறும், தொழிற்சாலைகள் மற்றும் எல்லைகளைக் கடந்து ஒன்றிணையுமாறும், போர் முனைப்பை நிறுத்தவும் அதனுடன் வரும் தாக்குதல்களிலிருந்து தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்கவும் கூட்டு நடவடிக்கைக்குத் தயாராகுமாறு WSWS தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.
