போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்யக் கோரி இலங்கையில் IYSSE நடத்திய கூட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உக்ரேனிய சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான சர்வதேசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமான இணையவழிக் கூட்டத்தை நடத்தியது. ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் பாசிசப் பண்புகளைக் கொண்ட அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்டனுக்கு, ஜோடிக்கப்பட்ட உயர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 9 அன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1917 ரஷ்யப் புரட்சியின் தலைவர்களான விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் தலைவராக போக்டன் உள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு அவர் செய்த “குற்றம்”, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் நேட்டோ நடத்தும் போரை எதிர்ப்பதும், போருக்கு எதிராக இரு நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுப்பதுமே ஆகும்.

இணையவழிக் கூட்டத்திற்கு முன்னதாக, இலங்கையில் ஐ.வை.எஸ்.எஸ்.இ., பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்தக் கூட்டம் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முகநூல் பக்கத்தில் சிங்களம் மற்றும் தமிழில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. சூம் கூட்டத்தை சுமார் 1,300 பேர் பார்வையிட்டுள்ளதோடு 137 பேர் பகிர்ந்திருந்தனர். ஏறத்தாழ 50 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சகுந்த ஹிரிமுதுகொட மற்றும் கபில பெர்னாண்டோ

ஐ.வை.எஸ்.எஸ்.இ. தலைவர்களில் ஒருவரான சகுந்த ஹிரிமுதுகொட, போக்டன் கொடூரமான முறையில் நடத்தப்பட்டமை குறித்தும், ஏற்கனவே உக்ரேனியச் சிறையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கழித்துள்ள நிலையில், அவர் நீண்டகாலச் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் சாத்தியம் குறித்தும் விளக்கினார். உக்ரேனின் அரச பாதுகாப்புச் சேவையான உக்ரேனியப் பாதுகாப்புச் சேவையால் (SBU), 2024 ஏப்ரல் 25 அன்று போக்டன் கைது செய்யப்பட்டார்.

“இந்தப் போர் ‘ஜனநாயகத்திற்காக’ நடத்தப்படுவதாக செலென்ஸ்கி ஆட்சி முன்வைக்கும் கூற்றின் மோசடித் தன்மையைத் தோழர் போக்டனின் வழக்கு எடுத்துக்காட்டுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போர் உக்ரேனியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவலாக மதிப்பிழந்துள்ளதாக, 2023 இல் நடைபெற்ற சர்வதேச மே தின இணையவழிப் பொதுக் கூட்டத்தில் போக்டன் தாமே தெரிவித்திருந்தார்,” என ஹிரிமுதுகொட கூறினார்.

கூட்டத்தில் பிரதான அறிக்கையை ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஒருங்கிணைப்பாளரான கபில பெர்னாண்டோ முன்வைத்தார். இந்த அரசியல் போராளிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையானது, அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ள ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகப் பெரும் வல்லரசுகளும் அவற்றின் அடிவருடிகளும் மேற்கொண்டு வரும் தயாரிப்புகள் குறித்த ஓர் எச்சரிக்கையாகும் என்று அவர் கூறினார்.

இந்த இளம் ட்ரொட்ஸ்கிஸ்ட், உக்ரேனிலும் சர்வதேச அளவிலும் போருக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பின் அடையாளமாக விளங்கும் அதேவேளை, “செலென்ஸ்கியின் அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீது தனக்குள்ள பாசிச அவமதிப்பை வெளிப்படுத்தியுள்ளது.”

தங்களது உலகளாவிய புவிசார் அரசியல் நோக்கங்களை இரக்கமின்றி முன்னெடுக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் ரஷ்யாவின் தன்னலக்குழு முதலாளித்துவ ஆட்சிக்கும் இடையே நேரடி அணுவாயுத மோதல் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்ற இந்தப் போர், ஒரு தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதையும் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

புட்டின் அரசாங்கம் அணுவாயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்துகின்ற அதேவேளை, ரஷ்யாவைத் தாக்குவதற்காக உக்ரேனிய ஆட்சிக்கு நேட்டோ தலைவர்கள் தொடர்ந்து ஆயுதங்களையும் நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றனர். “அணுவாயுதத் தாக்குதலைத் தொடுப்பதாக புட்டின் விடுத்துள்ள அச்சுறுத்தலுக்குத் தாங்கள் ‘அஞ்சவில்லை’ என்று அவர்கள் [நேட்டோ தலைவர்கள்] வெளியிடும் அறிக்கைகள், ரஷ்யாவைக் கொள்ளையடிப்பதற்காகத் திறந்துவிடும் அவர்களது ஏகாதிபத்தியப் பிரச்சாரத்தை அணுவாயுதப் பேரழிவின் அபாயம்கூட தடுத்து நிறுத்தாது என்பதையே குறிக்கின்றன. எவ்வாறாயினும், மனிதகுலம் அணுவாயுத அழிவின் அபாயத்தை எதிர்கொள்கின்றது.”

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ், ரஷ்யா தொடர்பாக ஐரோப்பிய வல்லரசுகளுடன் தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், வாஷிங்டன் ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள வளங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று பேச்சாளர் விளக்கினார். சீனாவை அடிபணியச் செய்வதே அதன் பிரதான நோக்கமாகும். மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஈரானுக்கு எதிராக அது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பும் இந்த உந்துதலின் ஒரு பகுதியாகவும், வளர்ச்சியடைந்து வரும் உலகப் போரின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

பெர்னாண்டோ மேலும் கூறியதாவது: “சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

“அனைத்துலகக் குழுவின் அரசியல் தலைமையின் கீழ், தோழர் போக்டன் சிரோட்டியுக்கும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பும் இந்த முன்முயற்சியை எடுத்து, இந்த முன்னோக்கிற்காகப் போராடினார்கள்.”

அனைத்துலகக் குழுவின் பணிகளுக்கு அடிப்படையாக உள்ள அத்தியாவசிய முன்னோக்கைச் சுட்டிக்காட்டிய பெர்னாண்டோ, 1917 ரஷ்யப் புரட்சி, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் வெற்றிகொள்ளப்பட்டது என்று விளக்கினார். முதலாம் உலகப் போருக்கு எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போல்ஷிவிக்குகள் போராடினர்.

தெற்காசியாவில் ஆளும் வர்க்கங்களின் பிற்போக்குத் தன்மையையும் பெர்னாண்டோ தொடர்ந்து விளக்கினார்.

இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியும் (பா.ஜ.க.), எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா முன்னெடுக்கும் போர்த் திட்டங்களுக்கு முக்கிய முண்டுகோளாக மாறியுள்ளன.

இலங்கையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்பு பண்பை வலியுறுத்திய பெர்னாண்டோ, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க அது தவறியுள்ளதுடன், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைப் போரையும் எதிர்க்கவில்லை என்று கூறினார்.

இராணுவத் தளபதிகள் உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான விஜயங்களையும் அவர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக வரவேற்றதையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அண்மைய விஜயத்தின்போது, அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் பி. “ஜே.பி.” வோவெல், “பயிற்சி, ஒன்றிணைந்து செயல்படும் திறன், அனர்த்தங்களுக்கான தயார்நிலை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்துவது” குறித்து கலந்துரையாடினார்.

இலங்கையில் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி இடதுசாரிக் கட்சிகள், ஏகாதிபத்திய அமைப்புமுறைக்குள்ளேயே சமாதானத்தைத் தேடும் அதன் முன்னோக்கை பெர்னாண்டோ விளக்கினார்.

“மிக அண்மையில், உலகப் போர் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, இந்தியப் பெருங்கடலை சமாதான வலயமாக அறிவித்த 1971 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களைத் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (SAARC) நாடுகளுக்கு இடையில் அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று முன்மொழிந்து, மு.சோ.க. ஓர் அறிக்கையை வெளியிட்டது!

“ஏகாதிபத்தியவாதிகள் இந்த ‘சமாதான’ முன்முயற்சிகளுக்குப் பணிந்துவிடுவார்கள் என்ற மாயையை அவர்கள் ஊக்குவிக்கின்றனர். இந்தப் போலி இடது குழுவின்படி, முதலாளித்துவத்திற்குள் இன்னமும் சமாதானத்திற்கான வாய்ப்பு உள்ளது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பால் இலக்குவைக்கப்படும் வெனிசுவேலா, கியூபா, ஈரான், ரஷ்யா மற்றும் பல நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் இத்தகைய சமாதான வலயங்களை அமைப்பதன் மூலம் தீர்க்க முடியும் என்றும் அது முன்மொழிந்துள்ளது.”

ஏகாதிபத்திய வல்லரசுகளிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் போரைத் தவிர்க்க முடியும் என்று கூறும் மு.சோ.க. மற்றும் ஏனைய போலி இடது குழுக்களை நிராகரிக்குமாறு பெர்னாண்டோ தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இந்தக் குழுக்கள், பெரும் வல்லரசுகளைப் போரை நோக்கித் தள்ளும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை முரண்பாடுகளை மறுக்கின்றன. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதோடு சீனாவை இலக்குவைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு உட்பட, வளர்ச்சியடைந்து வரும் உலகப் போரில் ஏகாதிபத்திய வல்லரசுகள் ஏற்கனவே பல முனைகளைத் திறந்துவிட்டுள்ள நிலையிலும், அவை இத்தகைய கூற்றுகளை முன்வைக்கின்றன என்று பெர்னாண்டோ விளக்கினார்.

“பொருளாதார நெருக்கடி தீவிரமடைதல், வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்கள், அமெரிக்கப் போர்த் தந்திரத்துடன் அரசாங்கம் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம், போரின் தாக்கம் ஏற்கனவே உணரப்படுகிறது. போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, இலங்கையிலும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புமாறு இளைஞர்களை நாம் வலியுறுத்துகிறோம். ‘போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்’ என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பது இந்தப் போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும்” என்று அவர் கூறினார்.

“சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அணிதிரட்டுவதன் மூலமே போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்ய முடியும்” என்று பெர்னாண்டோ முடிவுரையாகக் கூறினார்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொடர்ந்து பேணிவரும் கையகப்படுத்தல் மற்றும் பரஸ்பர சேவை ஒப்பந்தம் (ACSA) போன்ற அமெரிக்காவுடனான இருதரப்பு இராணுவ ஒப்பந்தங்கள், எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ACSA போன்ற ஒப்பந்தங்களின் கீழ், போர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் விமான நிலையங்கள் உட்பட இலங்கை முழுவதிலும் உள்ள உட்கட்டமைப்புகளைப் பயன்படுத்தவும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக பெர்னாண்டோ தெளிவுபடுத்தினார்.

“எனினும், எமது கவலை இலங்கையின் மீதான தாக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல; பிராந்தியம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மீதான விளைவுகள் பற்றியதுமாகும். இது உலகம் முழுவதும் பரவியுள்ள அமெரிக்க இராணுவ வலையமைப்பின் ஒரு பகுதியாகும்” என்று பெர்னாண்டோ தெரிவித்தார்.

“தெற்காசிய ஆளும் உயரடுக்குகளும் அவற்றின் அரசாங்கங்களும் இந்த ஏகாதிபத்தியத் தயாரிப்புகளில் விருப்பத்துடன் பங்காளிகளாக உள்ளதுடன், ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருப்பதையும் வெளிப்படுத்துகின்றன. தேசிய மற்றும் இனப் பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைத்து, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அதன் அடிவருடிகளிடமிருந்தும் முறித்துக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதே, போர் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தவும், இந்த நாடுகளில் நிலவும் கொடூரமான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளுக்கு முடிவதற்குமான வழிமுறையாகும்.”

கூட்டத்தில் பங்கேற்ற கண்டிப் பகுதியில் பணியாற்றும் இளம் மருத்துவரான பெரேரா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: “இந்தக் கூட்டத்தைக் கேட்டதிலிருந்து நான் புரிந்துகொண்ட பிரதான விடயம், அணுவாயுத உலகப் போர் ஏற்படும் அபாயம் எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதாகும். உலகில் எந்தவொரு நாடும் போரை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட கலந்துரையாடல்களை நடத்தவில்லை. அவை அனைத்தும் போருக்குத் தயாராகி வருகின்றன. எந்தவொரு நாடும் நடுநிலையாக இருக்க முடியாது.

“இலங்கை ஜனாதிபதி நடுநிலைமையைப் பேணுவதாகக் கூறப்படுவது பொய்யானது. அவர்கள் நடுநிலையாக இருப்பதாகக் கூறினாலும், ஏகாதிபத்தியவாதிகள் அவர்கள் மீது பிரயோகிக்கும் அழுத்தத்தை எதிர்கொள்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அவர்களிடம் இல்லை.

“முதலாம் உலகப் போரின்போது லெனின் போரை எதிர்த்துப் போராடினார் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். 1917 ரஷ்யப் புரட்சி, ஏகாதிபத்திய நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்ப்பந்தித்தது என்பதை இந்தக் கூட்டத்தின் மூலம் அறிந்துகொண்டேன். இந்த வேலைத்திட்டம் இன்றைய காலத்திற்கும் பொருத்தமானதாகும்.”

ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளும் போருக்கு ஆதரவளிப்பதுடன், மௌனம் காத்து வருவதாகவும் பெரேரா சுட்டிக்காட்டினார். போர் உட்பட மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை “ஒரு நாட்டிற்குள்” தீர்க்க முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Loading