முன்னோக்கு

இளைஞர்கள், தொழிலாளர்களின் உலகளாவிய கிளர்ச்சியும் ஆளும் வர்க்கத்தின் போர் வெறியும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரான்சின் பாரிஸில் உள்ள பாந்தேயோன் (Panthéon) முன்பாக நடைபெறும் வெகுஜனப் போராட்டம்.

கடந்த ஒரு வாரத்தில் வெகுஜனப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் ஐரோப்பா முழுவதும், சர்வதேச அளவிலும் பரவியுள்ளன. எரிபொருள் விலைகளை எதிர்த்துப் போராடும் “மஞ்சள் அங்கி” இயக்கத்தினர், ஒரு மாதமாகத் தமது பள்ளிகளை முடக்கியுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்துகொண்டபோது, பிரான்சில் அக்டோபர் 17 அன்று அரை மில்லியனுக்கும் மேற்பட்டோர் அணிவகுத்துச் சென்றனர். புதன்கிழமை கிரீஸில் ஏறத்தாழ 50 நகரங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் அணிவகுத்தனர். மிலானில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் மோதினர்; லிஸ்பன், போர்டோ ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் அணிவகுத்தனர்; அல்பேனிய மாணவர்கள் காவல்துறையுடன் மோதினர்; செர்பிய மாணவர்கள் பெல்கிரேட் நோக்கி அணிவகுத்தனர். சிலி, இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் மாணவர்களும் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கினர். கனடாவில் 9,000க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்கள், ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்திற்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு 97 சதவீத வாக்குகளுடன் அனுமதி அளித்தனர்.

இந்நிகழ்வுகள், உலக முதலாளித்துவத்தின் ஒரே நெருக்கடியிலிருந்து தோன்றி, ஒன்றோடொன்று பிணைந்தும் ஒன்றுக்கொன்று எதிராகவும் உள்ள இரு இயக்கங்களின் இதுவரையிலான மிகக் கூர்மையான வெளிப்பாடாகும். ஆளும் வர்க்கங்கள் எல்லா முனைகளிலும் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக, தற்போது இளைஞர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு சமூக எதிர்ப்பு இயக்கம் வளர்ந்து வருகிறது. ஆனால், முதலாளித்துவ வர்க்கத்தைப் போரை நோக்கித் தள்ளும் நெருக்கடி, உலக அளவில் தொழிலாள வர்க்கத்தின் மேலும் மேலும் பரந்த பிரிவுகளைப் போராட்டத்திற்குள் இழுத்து வருகிறது. ஏகாதிபத்தியப் போரின் வெடிப்பு, இப்போதுதான் தொடங்கியுள்ள ஒரு புரட்சிகர நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

இந்தப் போரே புற்றுநோய் போலப் பரவிவரும் ஒரே உலகளாவிய மோதலாகும். ஈரானைப் பற்றி வியாழக்கிழமை பேசிய ட்ரம்ப், “நாங்கள் அவர்களை அடித்து நொறுக்கிவிட்டோம்; தேவைப்பட்டால் இன்னும் அதிகமாகத் தாக்குவோம்” என்று கூறினார். நவம்பர் 3 அன்று நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு, ஈரானின் எரிசக்தித் தளங்கள், அணுசக்தி வசதிகள், ஏவுகணைக் கிடங்குகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை வாஷிங்டனும் டெல் அவீவும் வகுத்துள்ளன என்று புதன்கிழமை நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் “இஸ்லாமிய குடியரசை அழித்தொழிப்பதாக” அச்சுறுத்திய ட்ரம்ப், “அனைத்துக் குண்டுகளுக்கும் தாயான குண்டை” (mother of all bombs) பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்க மறுத்துள்ளார்.

“ஈரானின் கொலைகார ஆட்சியை நொறுக்குவேன்” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு சூளுரைத்துள்ளார். வெள்ளிக்கிழமை, ஹெப்ரோன் அருகே நடைபெற்ற தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து, அந்த நகரைச் சுற்றி வளைக்கவும், மேற்குக் கரை முழுவதையும் மூடுவதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் “ஆறு நாள் போருக்குப் பிறகு காணாத அளவிலான” இராணுவ நடவடிக்கையையும் அவர் அறிவித்தார். காஸாவில் நடைபெறும் இனப்படுகொலை தற்போது மேற்குக் கரைக்கு விரிவாக்கப்படுவதுடன், ஈரானுக்கு எதிராகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், நேட்டோ சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான தமது பினாமிப் போரை மிகவும் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி வருகின்றன; அணு ஆயுதப் போரின் அபாயம் இயல்பாக்கப்பட்டுவிட்டது. நேட்டோ முற்றுகையிலிருந்து காலினின்கிராட்டைப் பாதுகாப்பதற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக மாஸ்கோ கடந்த மாதம் எச்சரித்தபோது, “இதை நான் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே பதிலளித்தார். அக்டோபர் 16 அன்று ரஷ்யா மீதான பெரும்பாலான தடைகளை ட்ரம்ப் தளர்த்தியபோது, செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் வலதுபுறத்திலிருந்து அவரைத் தாக்கி, “ரஷ்யப் பொருளாதாரத்திற்கு உயிர்க்காப்பு ஆதரவை அளிக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

வெளிநாடுகளில் நடைபெறும் போர் என்பது, உள்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான போரையே அர்த்தப்படுத்துகிறது. நாடு “போர்களை நடத்திக்கொண்டிருக்கும்” நிலையில், குழந்தைப் பராமரிப்பு மையங்கள், மெடிகெய்ட், மெடிகேர் ஆகியவற்றுக்கு நிதியளிப்பது “சாத்தியமில்லை” என்று ஏப்ரலில் ட்ரம்ப் அறிவித்தார்; வெள்ளை மாளிகை 1.5 டிரில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தைக் கோரியுள்ளது, இது 42 சதவீத அதிகரிப்பாகும். ஐரோப்பிய சக்திகள் 800 பில்லியன் யூரோ வரை கூடுதல் இராணுவச் செலவினத்திற்குத் திட்டமிடுகின்றன; பிரெஞ்சு அரசாங்கம் சமூகச் சேவைகளில் 54 பில்லியன் யூரோ வெட்டுக்களைக் கோருகிறது. நிதியியல் தன்னலக்குழு கற்பனைக்கெட்டாத அளவுக்கு மேலும் செல்வச் செழிப்படைந்து வரும் அதேவேளையில், போரின் செலவைத் தொழிலாளர்களே சுமக்க வேண்டும் என்று அரசாங்கங்கள் கோருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் உலகின் மிகப் பெரிய பத்துப் பணக்காரர்களின் செல்வம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

இராணுவத்திற்குச் சமூகச் செலவினங்களைத் திருப்பிவிடுவதற்காக, நெரிசலான வகுப்பறைகளையும், தாங்க முடியாத வாடகைகளையும், பாதுகாப்பற்ற வேலைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறும், இப்போது கட்டாய இராணுவச் சேவைக்குத் தயாராகுமாறும், தற்போது போராட்டத்திற்காக வீதிகளில் இறங்கியுள்ள தலைமுறையினரிடம் கூறப்பட்டுள்ளது. பிரான்சில் செப்டம்பர் நடுப்பகுதியில் உயர்நிலைப் பள்ளி முடக்கங்கள் தொடங்கியதிலிருந்து, பெல்ஜியம், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளின் மாணவர்கள் அதே கோரிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்; ஸ்பெயினில் வீட்டுவசதிக்கான போராட்டங்கள் ஏறத்தாழ 50 நகரங்களுக்குப் பரவியுள்ளன; பத்தாயிரக்கணக்கான ஜேர்மன் மாணவர்கள் கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக எதிர்ப்பின் வெடிப்பு ஒரு உலகளாவிய செயல்முறையாக வளர்ந்து வருகிறது. ஈரானுக்கு எதிரான போரின் விளைவாக உயர்ந்துள்ள எரிபொருள் விலைகள், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், பொலிவியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சாலை மறியல் போராட்டங்களையும் போக்குவரத்து வேலைநிறுத்தங்களையும் தூண்டியுள்ளன; சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கொலம்பியாவில் தொழிலாளர்கள் அண்மையில் புதிய தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர். கென்யா முழுவதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்; பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்கள் நெடுஞ்சாலைகளை மறித்துள்ளனர்; வாக்காளர் பட்டியல்களிலிருந்து வாக்காளர்கள் பெருமளவில் நீக்கப்படுவதற்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோரை இந்தியக் காவல்துறை தடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்கா முழுவதும் வாகனம், எஃகு, சுகாதாரம், ஹோட்டல் துறைகளின் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.

இந்த இயக்கம் இளைஞர்களோடு மட்டும் நின்றுவிடாது. மாணவர்களை வீதிகளுக்குத் தள்ளிய புறநிலை சக்திகளே தொழிலாள வர்க்கத்தையும் போராட்டத்திற்குள் தள்ளுகின்றன; தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் இந்தப் போராட்டங்களைக் கண்டு பீதியடைந்துள்ளன. தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சக்தியாக எழுவதைத் தடுப்பதே அவற்றின் நோக்கமாகும். பிரான்சில் நவம்பர் 5, ஸ்பெயினில் நவம்பர் 11, இத்தாலியில் நவம்பர் 20 என அவை அறிவித்துள்ள வேலைநிறுத்தங்கள் ஒவ்வொன்றும் ஒரே நாளோடு முடிந்துவிடுகின்றன; அவை வாரக்கணக்கான இடைவெளிகளில் நடத்தப்படுகின்றன; தேசிய எல்லைகளுக்குள் அடைக்கப்படுகின்றன; தமது வர்க்கச் சகோதர சகோதரிகளிடமிருந்தும் இளைஞர் போராட்டக்காரர்களிடமிருந்தும் துண்டிக்கப்படுகின்றன. ஆனால், தான் உருவாக்காத, தன்னால் கட்டுப்படுத்தவும் முடியாத ஒரு செயல்முறைக்கே அதிகாரத்துவம் எதிர்வினையாற்றி வருகிறது. அதன் தாமதங்களும் பிளவுகளும், கீழிருந்து தொழிலாளர்கள் மத்தியில் உருவாகி வரும் அழுத்தத்தை அளவிடுகின்றன.

தாங்கள் எதை எதிர்கொள்கிறோம் என்பதை ஆளும் உயரடுக்குகள் அறிந்துள்ளன. செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் குறித்துப் பேசிய ட்ரம்ப், “அது ஒரு முழுமையான புரட்சியாக இருந்தது; அது தொடர்கிறது” என்று கூறினார். இந்த இயக்கத்திற்குக் காரணம் புலம்பெயர்ந்தோரும் இஸ்லாமுமே என்று அவரும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும், நெத்தன்யாகுவும் குற்றம்சாட்டியுள்ளனர். அரசாங்கங்கள் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியும், போலிஸ் அரசு நடவடிக்கைகளைக் கொண்டும் பதிலளிக்கின்றன. பிரான்ஸ் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்து, ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்துள்ளதுடன், போலிஸார் போராட்டக்காரர்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, அவர்களைப் பிற பணிகளிலிருந்து விடுவிக்கும் வகையில் இராணுவத்தினரைக் களமிறக்கி வருகிறது. பிரதமர் செபாஸ்தியேன் லெகோர்னு “தேவைப்பட்டால்” அவசரகால நிலையைப் பிரகடனம் செய்யக்கூடும் என்று கூறியுள்ளார். இத்தாலியின் பாசிசப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மிலானுக்கு 500 இராணுவத்தினரை அனுப்புகிறார்.

போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கான கருவியாகத் தீவிர வலதுசாரி சக்திகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அவை அமெரிக்கா, போலந்து, செக் குடியரசு, ஜப்பான், சிலி, பெரு, கொலம்பியா, கோஸ்டாரிகா ஆகிய நாடுகளில் ஆட்சிக்கு வந்துள்ளன அல்லது அரசாங்கத்தில் இணைந்துள்ளன. நவ-பாசிச RN (தேசிய பேரணி) அடுத்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறது; ஜேர்மனிக்கான மாற்று கட்சியும் ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியும் தத்தம் நாடுகளின் தேசிய கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ளன; ருமேனியாவில் பாசிச AUR (ருமேனியர்களின் ஒன்றியத்திற்கான கூட்டணி) முன்னிலை வகிக்கிறது. ஸ்பெயினில் நவம்பர் 29 அன்று நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு தீவிர வலதுசாரி வோக்ஸ் (Vox) அரசாங்கத்தில் நுழையக்கூடும்; ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரேசிலிய இரண்டாம் சுற்றுத் தேர்தலில், பாசிசத் தன்மை கொண்ட பிளாவியோ பொல்சனாரோ லூலாவுக்கு நிகராகப் போட்டியிடுகிறார்.

1938இல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் லியொன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “ஏகாதிபத்தியப் போர் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்ளையடிக்கும் அரசியலின் தொடர்ச்சியும் அதன் கூர்மைப்படுத்தலும் ஆகும். போருக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் அதன் வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சியும் அதன் கூர்மைப்படுத்தலும் ஆகும்.” 1917இல் ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரிப் புரட்சி போல்ஷிவிக்குகளால் உருவாக்கப்படவில்லை. போரால் உருவான நெருக்கடியிலிருந்தே அது வெடித்தெழுந்தது. அக்டோபரில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வழிவகுத்த வேலைத்திட்டத்தையும் நனவுபூர்வமான புரிதலையும் போல்ஷிவிக்குகளே வழங்கினர்.

போர், சமூக நெருக்கடி ஆகியவற்றின் தாக்கத்தால் இன்றைய வர்க்கப் போராட்டமும் அவ்வாறே புறநிலையாக வளர்ந்து வருகிறது. தொழிலாளர்களைத் தமது சொந்தப் போராட்டத்தின் புறநிலைப் போக்கு குறித்து நனவுடையவர்களாக்குவதும், வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்துவதுமே சோசலிஸ்டுகளின் கடமை என்பது மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். பள்ளிகளிலும் பணியிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும், முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்க எந்திரத்திடமிருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் தேவை என்பதையே அந்தப் போக்கு சுட்டிக்காட்டுகிறது; அதிகாரத்துவங்கள் வகுத்துள்ள கால அட்டவணைகளையும் தேசிய எல்லைகளையும் உடைத்துக்கொண்டு செல்லவும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படவும், போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் சமூகப் பேரழிவுக்கும் எதிரான பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிக்கவும் இந்தக் குழுக்களால் முடியும்.

போராடி வரும் இளைஞர்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகளான தரமான பள்ளிகள், வீட்டுவசதி, ஊதியங்கள், கட்டாய இராணுவச் சேவைக்கு முடிவு ஆகியவற்றை, கடன் வழங்குவோருக்குக் கட்டுப்பட்டும் போருக்கு உறுதிபூண்டும் உள்ள அரசாங்கங்களிடமிருந்து வென்றெடுக்க முடியாது. இந்தக் கோரிக்கைகளை வெல்வதற்கு, நிதியியல் தன்னலக்குழுவின் சொத்துக்களைக் கைப்பற்றுவதும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கத்திடம் ஒப்படைப்பதும் அவசியமாகும்.

Loading